மும்மொழியால் குழந்தைகளின் கல்விக் கனவு சிதையுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


02/03/2025

மும்மொழியால் குழந்தைகளின் கல்விக் கனவு சிதையுமா?

 Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Copy%20of%20Cop_20250228_183729_0000

உலகம் முழுவதும் 7,100 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக அறியப்படுகிறது. உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக முதலிடத்தில் ஆங்கிலமும் இரண்டாவது இடத்தில் மாண்டரின் எனப்படும் சீன மொழியும் உள்ளன. அதேபோல், உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உலகின் மிகப் பழமையான தனித்துவம் மிக்க மொழி தமிழ். இது திராவிட மொழிக் குடும்பத்தின் பழமையானதாகும். தமிழ் மொழி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொழியியலில், புவியியல் ரீதியாக பரவலான மற்றும் பல்வேறு மொழி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்வதைச் சாத்தியமாக்கும் ஒரு மொழி உலக மொழி எனப்படும். அந்தவகையில் தமிழ் மொழி தனித்த இடம் பிடித்துள்ளதை உலக மொழியியல் அறிஞர்கள் பலரும் இன்றுவரை ஒப்புக்கோண்டு வருவது மிகையாகாது.

பன்மொழிகள் பேசப்படும் இந்தியாவில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவை செம்மொழி அங்கீகாரம் பெற்றுள்ளன. மேலும், இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமான தேசிய மொழி என்பது ஒன்று கிடையாது. இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் விதி 1976 (1987 இல் திருத்தப்பட்டது), இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ நோக்கத்திற்காக தேவைப்படும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்த அனுமதிக்கின்றது. இந்திய நாடாளுமன்றத்தில் அலுவல்கள் யாவும் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள், நீதித்துறை, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான தகவல் தொடர்பு போன்ற அதிகாரப்பூர்வ அலுவல்களுக்காக ஆங்கிலம் அனுமதிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சட்டத்தின் மூலம் தங்கள் சொந்த அலுவல் மொழி(களை)யைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் தவிர, இந்திய அரசியலமைப்பு 22 மாநில மொழிகளை அங்கீகரித்துள்ளது. அசாமி, மைதிலி, வங்காளம், குசராத்தி, இந்தி, தமிழ், கொங்கணி , மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, கன்னடம், தெலுங்கு, போடோ, சந்தாளி, தோக்ரி, காசுமீரி, உருது ஆகியனவாகும். இவற்றுள் இந்தி மொழியை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களில் தத்தம் தாய்மொழிப் பயன்பாட்டைப் பலரும் இழந்து நிற்கும் அவலம் வருந்தத்தக்கது. 

பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப் முதலான மாநிலங்களில் தொன்றுதொட்டு பேசிவந்த தாய்மொழிகள் பலவும் இன்று அழிந்து போயுள்ளது குறிப்பிடத்தக்கது. மைதிலி (பீகார்), விரசு (உத்தரபிரதேசம்), அவதி (உத்தரப்பிரதேசம்), கனோசி (உத்தரப்பிரதேசம்), புந்தேல்கண்டி (மத்தியப்பிரதேசம்), சூரசேனி (சவுராட்டிரம்), அரியானவி (அரியானா) மராத்தி (மகாராட்டிரம்) இராஜஸ்தானி, போஜ்புரி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்க்கண்ஷி, சந்தலி, சட்டீஸ்கரி, கோர்பா புழங்கி வந்த நிலங்கள் முற்றிலுமாக இந்தி கோலோச்சும் பகுதிகள் ஆகிவிட்டன. அங்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் அனைத்தும் இந்தி மயப்படுத்தப்பட்டு விட்டதை நன்குணர இயலும். தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட 44% பேர் இந்தி பேசுவதாகவும் 1971 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இந்தி மொழி 161% வளர்ச்சி கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


அதாவது, நில அபகரிப்பு என்பது மொழி அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் தமிழரின் நிலமான தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அன்று முதல் இன்று வரை தமிழ் மண் தீங்கு விளைவிக்கும் நச்சுச் செடிகளை மட்டுமல்ல களைச் செடிகளை படர அனுமதிப்பதில்லை. தென்கோடியில் காணப்பட்டாலும் புதிய வெளிச்சத்தை நாடெங்கும் பாய்ச்சிட தமிழ்நாடு ஒவ்வொரு முறையும் சீதை போன்று தீக்குளித்து தம் எல்லோருக்குமான பரிபூரண வாழ்வியல் பேருண்மையை நிறுவ முயற்சிக்கிறது. 

மும்மொழிக் கொள்கையால் காலம் கடந்து விழிப்படைந்த இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராட்டிரம், பஞ்சாப் தெலுங்கானா முதலானவை தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம் உணர்ந்து தொடக்கக்கல்வியில் தாய்மொழி கற்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றத் தொடங்கியுள்ளன. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவது எண்ணத்தக்கது.

பிறமொழிக் கற்றல் என்பது இயல்பாக நிகழ வேண்டுமேயன்றி திணிப்பால் கட்டாயத்தால் நிகழக் கூடாது. அதற்கேற்ப எதிர்ப்பும் வெறுப்பும் மிகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியோ, அவ்வாறே இந்தியும் ஓர் அந்நிய மொழியாகும். தென்னிந்திய மொழிகள் மற்றும் வடமொழி ஆகியவற்றுடன் எளிதில் தமிழில் நிகழும் கலப்பும் ஏற்பும் உறவும் இந்தி மொழியுடன் நிகழவும் நிகழ்த்தவும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. 

ஏனெனில், இரு மொழிகளுக்கு இடையேயான எழுத்து மற்றும் உச்சரிப்பு முறைகள் என்பது வேறுவேறு. ஆங்கிலம் இருப்பது போல. மொழிக் கற்றல் இலகுவாக இணக்கமும் நெகிழ்வுத்தன்மையும் இன்றியமையாதது. தமிழைப் பொறுத்தவரை ஆங்கிலமும் இந்தியும் இவற்றிற்கு எதிரானவை. அந்நியப் பண்புகள் மிக்கவை. அப்படியிருக்க எவ்வாறு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குழந்தை இரு அந்நிய மொழிகளை ஒரே நேரத்தில் கற்க இயலும்? 

தவிர, மெத்த படித்த ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலர் மும்மொழியை வலியுறுத்தும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் ஏன் திராவிட முன்மாதிரி அரசு முரண்டு பிடிக்கிறது என்றும் அதன் காரணமாக 2500 முதல் 5000 கோடி அளவிலான ஒருங்கிணைந்த கல்வி நிதியை இழந்து தவிக்கும் சூழலில் ஆடப்படுகிறது என்றும் வெளிப்படையாகப் பேசும் நோக்கும் போக்கும் மலிந்து வருவதைக் காணமுடிகின்றது. இவர்கள் அனைவருக்கும் அவரவர் கல்வித் தகுதி உண்மைத்தன்மை அடையவும் அரசுப் பணியைச் செவ்வனே தொடரவும் ஒன்றிய அரசு முன்மொழியும்

TEACHERS NEWS
'அந்த' மூன்றாவது மொழியில் கட்டாயம் தேர்வெழுதி உடனடியாகத் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டம் பிறப்பிப்பதே சரியாகும்.

கல்வி சார்ந்து மேற்கொள்ளப்படும் புள்ளிவிவர தரவுகள் தெரிவிப்பது யாதெனில்,  மும்மொழிக் கற்பிக்கும் மாநிலங்களைக் காட்டிலும் இருமொழிக் கொள்கையை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் தமிழ்நாடு எந்த வகையில் கல்வியில் தாழ்ந்து போனதாகக் கூறவில்லை. இன்று உலகளவில் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் அனைவரும் திராவிட அரசின் உயிர் மூச்சாக விளங்கும் இருமொழிக் கொள்கையில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களே ஆவர்.

அந்நிய, ஆதிக்க மொழித் திணிப்பு என்பது மொழி சார்ந்து குழந்தையின் அறிவாற்றல்  மீது நிகழ்த்தப்படும் துல்லிய உளவியல் தாக்குதல் ஆகும். இதில் உலக மொழியாவது? தேசிய மொழியாவது? எல்லாம் ஒன்று தான்! குறிப்பாக, இந்தி மொழியை விருப்பப்பட்டு கற்க தமிழ்நாட்டில் எந்த தடையும் இல்லை.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

நகரங்கள் தோறும் தெட்சிண ஹிந்தி பிரசார சபா வழியாக பல்வேறு தேர்ந்த இந்தி மொழி ஆசிரியர்கள் மூலம் ஆண்டிற்கு இருமுறை எட்டு வகையான தேர்வுகளை நூற்றுக்கணக்கான பலதரப்பட்ட மாணவர்கள் தனிப்படிப்பு வாயிலாக எதிர்கொள்வதை காண முடிகிறது.

அதுபோல், ஒன்றிய அரசால் மும்மொழி அடிப்படையில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழ் மொழியாசிரியர் காலிப்பணியிடங்கள் ஏராளம் இருப்பதையும் அறிய முடிகிறது. சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மிகச் சிறிய அலுவல் மொழியாக இருக்கிறது. 25000 க்கும் குறைவான பேர் தான் சமஸ்கிருத மொழி பேசுகிறார்கள் என்பதே உண்மை. இதுகுறித்து, மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது. அதாவது, சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை, ஹிந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் கோல்வால்கரின் கூற்றாக Bunch of Thoughts என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது அறியத்தக்கது.

இதன் மூலம், பன்மைத்துவம் நிறைந்த இந்தியாவில் ஒற்றை மொழி; ஒற்றை பண்பாட்டை நிறுவும் ஆரிய, சனாதன, பார்ப்பனீய, மநுதர்மம் அடிப்படையிலான வருணாசிரம அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். மொழிவழி மீளவும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் வேரூன்றிப் புரையோடிக் கிடந்த மூடநம்பிக்கை, அடிமைத்தனம், வறுமை, ஏழ்மை, மானுட நீதிக்குப் புறம்பான மநுஸ்மிருதி அடிப்படையிலான சட்டம் ஆகியவற்றை நிறுவும் நவீன கால முயற்சிகள் ஆகும்.

அண்மைக்காலமாக இந்திய திருநாட்டில் சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான அடையாள, வெறுப்பு மற்றும் புல்டோசர் இடிப்பு அரசியல் மலிந்து வருவது வேதனைக்குரியது. இந்தி திணிப்பு மூலம் நாட்டை நவீன இந்து மயமாக்குதல்; நவீன இந்து மயம் வழி நவீன வருணாசிரம மற்றும் நவீன குலக்கல்வி முறையை உருவாக்குதல்; அதற்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் காவிமய அரசியலின் இறுதி இலக்கு.

இந்த சாணக்கிய சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு வெளியில் முதலைக் கண்ணீர் வடிப்பது என்பது கேலிக்குரியதாகும். இங்கு ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மொழியை எதிர்ப்பது தமிழ்நாட்டின் நோக்கமல்ல. இந்தி மொழியின் ஆதிக்கத்தையும் கட்டாயத் திணிப்பையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதுதான் எல்லோருக்குமான அரசியல் கடமையாக உள்ளது.

மும்மொழிக் கொள்கையானது ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் இந்தி திணிப்பால் இந்திய அளவில் கல்வியில் இடைநிற்றல் இல்லா மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, அந்த நிலையிலிருந்து வழுவக்கூடும். இது பாமர மக்களின் அடிமடியில் கை வைப்பதற்கு ஒப்பாகும். பள்ளி வயதிலேயே கூடுதல் மொழிச் சுமையால் பெற்றோர்கள் மேற்கொள்ளும் குலத் தொழிலைச் செய்யும் போக்கு மாணவர்களிடம் மிகும். இது தமிழ்நாட்டை களப்பிரர் கால இருண்ட காலத்திற்கு அழைத்துச் சென்று விடக்கூடும்.

கடந்த கால இரு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது அலுவல் மொழிக்கு எதிரானதாகும். ஆனால், இது கல்வி வகைப்பட்டது. கல்வியானது பண்பாடு மற்றும் அரசியல் வெளிப்பாடு ஆகும். தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழர் அரசியல் மீது நேரடியாகத் தொடுக்கும் தாக்குதலே தற்போதைய இந்தி மொழித் திணிப்பு அரசியல் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழர் பண்பாட்டை முற்றிலுமாக அழித்தொழிக்கும் முயற்சி. பாசிசத்தின் உச்சக்கட்டம். தமிழ்தாட்டை எல்லா வகையிலும் வீழ்ச்சி அடையச் செய்ய ஆணவத்துடன் தொடுக்கப்படும் நஞ்சில் தோய்த்த பிரம்மாஸ்திரம். அதற்காக இத்தனை வாடகை வாய்கள் நீலிக் கண்ணீர் வடிப்பது துயரம் மிக்கது. ஆபத்தானதும் கூட

மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு வழங்கி முடக்கி வைத்திருக்கும் ஒருங்கிணைந்த கல்விக்கான நிதியை நிபந்தனைகள் ஏதுமின்றிக் கொடுப்பது ஒன்றிய அரசின் கடமையாகும். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் மாபெரும் கனவு கல்வி. அந்த கனவைச் சிதைப்பது பெரும் அநீதி. இந்த மனிதத்தன்மையற்ற அநீதிகளுக்கு எதிராகத் தீரமுடன் சமர் புரியும் தமிழ்நாடு அரசின் பக்கம் நிற்க வேண்டியது தாய்மொழியை நேசிக்கும் தமிழ்மொழியைச் சுவாசிக்கும் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமை ஆகும். 

எழுத்தாளர் மணி கணேசன்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459