இனியும் நிதி சார்ந்ததென்று தவிர்க்காமல் நீதியை நிலைநாட்டுவீர்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/02/2025

இனியும் நிதி சார்ந்ததென்று தவிர்க்காமல் நீதியை நிலைநாட்டுவீர்!

images%20(31)%20(6)


தமிழ்நாடு அரசுக்கு இது பொல்லாத போதாத காலம். ஒருபுறம் ஒன்றிய அரசின் அடிமடியில் கைவைக்கும் வஞ்சகப் போக்கைத் தீரமுடன் எதிர்கொள்ளும் சுயமரியாதையைக் காப்பாற்ற போராடும் நிலை. மறுபுறம் அரசின் திட்டங்கள் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம் நியாயமான, இழந்த, பறிகொடுத்த உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கையறு நிலையில் எதிர்கொள்ளும் பரிதாப நிலை. 

அவரவர் நியாயம் அவரவர்க்கு! என்றாலும், ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் சவளை பிள்ளைக்கு மட்டுமே சோறூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருப்பதில்லை. பசித்து அழும் ஒவ்வொரு குழந்தையும் தாய்க்கு முக்கியம். இதை ஆளும் அரசுகள் உணருதல் நல்லது. ஆட்சியாளர்களுக்கு மற்றவர்கள் நலன்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அவ்வாறே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்களைக் காப்பதும் இன்றியமையாதது. 

அவர்களும் தம் வாழ்வாதாரத்திற்காகவே போராட விழைகின்றனர். நுட்பமாகச் சொல்ல வேண்டும் என்றால் போராட்டத்திற்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். 

குறிப்பாக, 2003 இல் முட்டாள் தினமான ஏப்ரல் 1 அன்று தொடங்கிய தொழிலாளர்கள் விரோத, சலுகை அபகரிப்புகள், தற்காலிக தீர்வாக முன்மொழியப்படும் குழு அமைத்தல் நடவடிக்கைகள் தற்போது வரை தொடர்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்கள் சார்ந்த குறைதீர் குழுக்களுள் மூன்று நபர் குழு மற்றும் ஒரு நபர் குழுவால் கிடைக்கப்பெற்ற பலன்கள் இப்போதும் அனுபவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் போராட்ட அறிவிப்புகள், அதற்கேற்ப மீண்டும் மீண்டும் குழு அமைத்து மழுங்கடிக்கும் நடவடிக்கைகள், ஆளும் அரசு மீது ஊழியர்கள் அவநம்பிக்கை மற்றும் பழிவெறி கொள்ளல் மற்றும் தேர்தலில் அப்பட்டமாக வெளிக்காட்டுதல், அதன்பின் மீண்டும் ஆட்சிக்கு வந்து பழிவாங்கும் செயல்களைக் கட்டவிழ்த்துப் பயமுறுத்துதல் என ஆடுபுலி ஆட்டம் ஆடிவருவது இரு தரப்புக்கும் நல்லதல்ல. இதற்கிடையில், நாற்காலி ஆசையில் பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கி அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவு மோகம் தணிந்ததும் தாம் வஞ்சகமாக ஏமாறியதை ஊழியர்கள் உணர்வதும் மீளவும் புதியதொரு மீட்பரைத் தேடியலைவதும் சொல்லொணா துயரம் ஆகும்.

பொதுவாக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்கள் காக்கும் அரசாக இருந்தது தற்போது பழங்கதையாக உள்ளது. இக்கட்டில் தவிக்கும் அரசு தம் அக, புற நெருக்கடிகளை, தாம் தமக்குள்ளாக தம் புஜ பல பராக்கிரமங்களைக் கொண்டு சமாளித்து கொடிய சக்கர வியூகத்திலிருந்து வெளிவர வேண்டுமேயன்றி, அதிகாரமற்ற, எந்தவொரு பலமும் இல்லாத, கட்சி உறுப்பினர்கள் அல்லாத, அப்பாவிகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அதற்குள் திணிப்பது என்பது சரியல்ல.

இந்திய துணைக்கண்ட அளவில் தமிழ்நாடு கல்வியில் எல்லாவகையிலும் சிறந்து விளங்குவதாக அனைத்துத் தரப்பினரும் பாராட்டுவது அனைவரும் அறிந்ததே. இஃது எளிதான செயல் அல்ல. 2014 க்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பணிநியமனம் நியமிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை. கல்வித்துறை வரலாற்றில் நீதிமன்ற ஆணையைக் காரணம் காட்டி தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் இரண்டாவது கல்வியாண்டிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத சிறந்த நிர்வாகம் அளிக்க நல்ல தலைமை இல்லாத கடினமான சூழ்நிலைகள் வேறு! ஒரு சிலருக்கு மட்டுமே நன்மையளிக்கக் கூடிய ஒரு கருப்பு அரசாணையைப் புகுத்தியதுடன் பொதுமாறுதலும் வழங்கி அடிப்படை வசதிகள் குன்றிய குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உருவாக காரணமாக அமைந்த துர்பாக்கிய பொழுதுகள்! இதுவரை இல்லாத அளவிற்கு பணி நெருக்கடிகள்! சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆசிரியர் சமூகம் இருப்பது வேதனைக்குரியது. 

ஊதியத்தில் முரண்பாடுகள், நிரந்தர ஓய்வூதியம் இல்லாமை, ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, ஒப்படைப்பு ஊதிய சலுகை பறிப்பு, தணிக்கைத் தடைகள் மற்றும் சிறுகச் சிறுக பெற்றதை மொத்தமாகத் தொகையைக் கட்டச் செய்தல் என ஏராளமான நிதி சார்ந்த இழப்புகள் ஒருபுறம். இவற்றிற்கு சற்றும் குறைவில்லாமல் மனிதாபிமானமற்ற முறையில் தொடர் ஆய்வு நெருக்கடிகள், புள்ளிவிவரங்களுடன் போராடும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கும் மன அழுத்தங்கள், கேட்க நாதியற்ற, பாதுகாப்பு சிறிதும் அற்ற பணிச் சிக்கல்கள், ஆளற்ற நிலையில் கூடுதல் பணிச்சுமைகள் மறுபுறம். இவற்றிற்கு இடையில் ஒவ்வொரு ஆசிரியரும் ஆயிரம் இன்னல்கள் சூழ நாட்டின் மீதான பற்றும் பெருமிதமும் மாவீரமும் கொண்ட எல்லையைக் காத்து நிற்கும் படைவீரராக, தமிழ்நாட்டின் கல்வியை உயிரைப் பணயம் வைத்து காத்து பெருமைத் தேடித் தருவதை மறுக்க முடியாததாக உள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறைகூவல் விடுத்துள்ள போராட்ட அறிவிப்புகளை அரசு கவனத்தில் கொண்டு சுமுக பேச்சுவார்த்தைக்கும் ஒரு குழு அமைத்துள்ளது எண்ணத்தக்கது. எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் என்பது சரியான தீர்வல்ல. ஏனெனில், அவை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிவாரண நிலையங்கள் அல்ல. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தவிர்க்கவே செய்யும். 

ஆக, எல்லா வகையிலும் இரு தரப்பு பேச்சுவார்த்தையே உரியதும் உகந்ததும் ஆகும். அரசுக்கு அன்றாடம் ஆயிரம் பணிகள் உள்ளன. அதற்கு தீர்வாக தான் குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் மீது நம்பிக்கை கொள்வதென்பது போராட்டக் குழுவின் கடமை ஆகும். அதுவரை கட்டுண்டு பொறுத்திருப்பது ஒவ்வொரு உறுப்பினரின் தலையாய கடன். இதில் பகடிக்கு இடமில்லை. அவநம்பிக்கைக்கும் அதைத் தொடர்ந்த விரக்தி எண்ணங்களுக்கும் கருதுகோள்கள் வழியே முன் முடிவுகள் கொள்வது மனித அபத்தம். விதைத்ததும் முளைக்கும் வித்து என்பது இதுவரை உலகில் இல்லை. இத்தகையோரின் கோரிக்கைகளும் அத்தகையதே!

இத்தகைய நம்பிக்கையின்மையை உருவாக்கியதன் பின்னணியில் அரசின் பங்கு கணிசமாக உள்ளது. நெடுநாள்கள் யாரையும் ஏமாற்றிக் கொண்டே இருக்கவும் முடியாது. எத்தனைக் காலம் தான் மழுப்பிக் கொண்டிருப்பது? 

இதன்மூலம், இரை விழாதா என்று ஏங்கிக் காத்துக் கிடக்கும் எதிரணியினர் வாழ்வாதாரத்தை இழந்து நிலைதடுமாறி நிற்கும் கூட்டத்தைத் தம்வயப்படுத்த விரிக்கும் வலையில் வீழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கை துரோகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் விட்டில் பூச்சிகள் போல் திடீர் வெளிச்சத்தை நோக்கி திசைமாறிப் போதல் என்பது பேரிழப்பு. ஏனெனில், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தேர்தல் திருவிழாவில் வெற்றியைத் தேடிச் சேகரித்துத் தரும் தேனீக்கள் ஆவார்கள்.

குடியாட்சி நாட்டில் தனிமனித அல்லது குழுவின் குரலை வேண்டுமென்றே நிராகரிப்பது என்பது ஆள்பவருக்கு அழகல்ல. ஏனெனில், ஒரு மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதேபோல், ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் ஒருபோதும் தனிமனிதர்கள் அல்லர். அவர்களைச் சுற்றியும் பலர் உள்ளனர்.

விளம்பரங்கள் மற்றும் கூடிக் களையும் கூட்டங்கள் கண்டு புளகாங்கிதம் அடைவதில் பயனொன்றும் விளையப் போவதில்லை.

TEACHERS NEWS
விடியலால் ஒளிரும் தமிழ்நாட்டை நிரந்தரமாக இருட்டில் தள்ள இந்த இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரும் கும்பல் வழிமேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறது. அவை உதிர்க்கும் ஆசை வார்த்தைகளுக்கும் வெறியூட்டும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாகி, தம் பகுத்தறிவைப் புறந்தள்ளி தமிழ்நாட்டின் நலன் விடுத்து கல்வியில் நஞ்சைக் கலக்கத் துணியும் காவி அரசியலுக்குத் தூபம் போட தொடங்கியிருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசர அவசியம் ஆகும். 

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கொடுக்கும் நிலையில் உள்ள ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்திற்கு மாற்றாக மாற்றத்தையும் அவநம்பிக்கைக்குப் பதிலாக நம்பிக்கையையும் ஒட்டுமொத்தமாகக் கைவிரித்துக் கைவிடுவதைத் தவிர்த்துக் கரம் பற்றி தாயுள்ளத்துடன் நிதி சார்ந்த மற்றும் சாராத என்று வகைப்படுத்தாமல் மானுட நீதி சார்ந்து நியாயம் வழங்க முன்வர வேண்டும் என்பதே நல்லோர் பலரின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். நீதி நிலைநாட்டப்படுமா?

எழுத்தாளர் மணி கணேசன்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459