சென்னை: இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐடி நிறுவனங்களை விட ஜிசிசி மையங்கள் அதிக எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. இத்தகைய ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதோடு மட்டுமில்லாமல் பலருக்கும் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது.
இந்தியாவில் 2024 -25 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவின் முதன்மையான ஐந்து ஐடி நிறுவனங்கள் 13,000 பேரை மட்டுமே புதிதாக
வேலைக்கு அமர்த்தியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 44,000ஆக இருந்தது
அது மட்டும் இல்லாமல் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் ,விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலையில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 3.4 லட்சமாக இருந்து நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அது 3.1 லட்சம் என குறைந்துவிட்டது. காக்னிசெண்ட் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 9000
என்ற அளவிலும் விப்ரோ நிறுவனத்தில் 29,000 என்ற அளவிலும் குறைந்துவிட்டது
எதிர் வரக்கூடிய காலாண்டில் ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்யாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2022-23இல் இந்திய ஐடி நிறுவனங்கள் 60 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு சேர்த்துள்ளன. இதன் மூலம் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியன் என்ற அளவை எட்டியது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவில் ஜிசிசி மையங்கள் புதிதாக 2.8 லட்சம் பேரை வேலைக்கு எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஐடி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பான நாஸ்காம் அண்மையில் வெளியிட்ட ஒரு தகவலில் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டு ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை 2200 என்ற அளவை எட்டும் என்றும் ஜிசிசி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 2.8 மில்லியனாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் அது சார்ந்த வேலை வாய்ப்புகளும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு ,செயற்கை நுண்ணறிவு , கிளவுட் உள்ளிட்ட பிரிவுகளில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய ஜிசிசி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதாக இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இந்தியாவை நோக்கி வர கூடிய ஜிசிசி மையங்கள் ஐடி நிறுவனங்களைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாக சம்பளம் தருவதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment