தமிழகத்தில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு 2019-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாகவும், மூன்றாகவும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2021-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றனர். கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 92,316 பேர் பதவியேற்றனர். அவர்களது பதவிக்காலம் நேற்று முன்தினம் (ஜன.5) முடிவுற்றது.
இதற்கு முன்னதாக மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பான வழக்கில், “வார்டுகள் மறுவரை செய்யும் பணி, ஊராட்சிகள் பலவற்றை நகர்ப்புற ஊராட்சிகளுடன் இணைக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பிறகே தேர்தல் நடத்த முடியும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு தனி அலுலவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் பா.பொன்னையா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் பொறுப்பு வகித்தவர்களின் பதவிக்காலம் ஜன.5-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய ஜன.6-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் செலுத்தப்படும் வரவினங்களைக் கண்காணிக்க வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்குவதை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், அரசாணைகள், விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment