“தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும், இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “யுஜிசி நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும், இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, யுஜிசி-நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றியமைக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடந்த ஜன.7 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜன.13) தேசிய தேர்வு முகமை இயக்குநர் ராஜேஷ் குமார் வெளியிட்டிருந்த அறிவிக்கையில், “பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, ஜனவரி 15, 2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
விண்ணப்பதாரர்களின் நலனுக்காக, தேசிய தேர்வு முகமை ஜனவரி 15, 2025 அன்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் தேர்வு ஏற்கனவே அறிக்கப்பட்ட அட்டவணையின்படி நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment