மத்திய அரசின் இணையதளத்தில் மாணவர், ஆசிரியர் விவரங்களை பிப்.17-க்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வி துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/01/2025

மத்திய அரசின் இணையதளத்தில் மாணவர், ஆசிரியர் விவரங்களை பிப்.17-க்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வி துறை உத்தரவு

1347476

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் யுடிஐஎஸ்இ தளத்தில் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை மத்திய கல்வி அமைச்சகம் சேகரித்து, அதற்கேற்ப முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) இணையதளத்தில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பின்னர், ஒவ்வொரு வகுப்பு, பிரிவு வாரியாக மாணவர்களின் பொது விவரங்கள், சேர்க்கை,


பதிவு விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், ஆதார் எண் போன்றவற்றை பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் மிக துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை பிப்ரவரி 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கேற்ப, ஒரு பள்ளியில் இருந்து விலகி வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து முடித்து அனுப்ப வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459