இணையவசதி அல்லாமல், வெறும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவையை மட்டும் பெறும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது.
இதன் மூலம், ஆன்டிராய்ட் போன்ற செல்போன்கள் அல்லாமல், அடிப்படை வசதிகொண்ட அல்லது டேட்டா வசதியே தேவைப்படாதவர்கள் அதிகப் பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்வது தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வழி இதன் மூலம் பிறக்கும் என்கிறார்கள்.
இந்த திட்டம், ஊரக மற்றும் வயதான பயனாளர்களுக்குப் பேருதவியாக இருக்கும். கிராம மற்றும் வயதானவர்கள் பலரும் செல்போனில் வரும் அழைப்பை மட்டுமே எடுத்துப் பேசும் அளவில் அதனைப் பயன்படுத்தும் நிலையில், அவர்களும் டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்யும் நிலை மாறவிருக்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையமானது, நாட்டில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது. அதில், டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு என தனியாக வெறும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதிகொண்ட ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன்-ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இனி வெறும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி கொண்ட வவுச்சர்களை அறிமுகம் செய்ய வேண்டியது உள்ளது. இதனால், அனைத்து ரீசார்ஜ்களிலும் டேட்டா வசதியும் இருப்பதும், டேட்டா பயன்படுத்தும் வசதியில்லாத செல்போனைப் பயன்படுத்துபவர்களும் அதே திட்டத்துக்கு ரீசார்ஜ் செய்வதும் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் அகண்டவரிசை வசதி உள்ளவர்களுக்கு டேட்டா வசதி தேவைப்படாது என்பதால் அவர்களுக்கும் இது பயன்படும். சிறப்பு திட்டங்கள் மற்றும் பல சேவைகள் இணைந்த திட்டங்களுக்கான காலத்தை நீட்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சிறப்புத் திட்டங்களின் கால அளவான 90 நாள்கள் என்பதை 365 நாள்கள் என அதிகரிக்குமாறும், செல்போன் பயனாளர்கள், தங்களது செல்போனுக்கு எந்த விதத்தில் ரீசார்ஜ் செய்வது என்பதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கே கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment