அரசு பள்ளிகளுக்கு பாடபுத்தகங்களை வினியோகம் செய்ய வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு ஒதுக்குகிறது. எனவே ஆசிரியர்கள் சொந்த செலவில் பாடபுத்தகம் எடுக்க வேண்டாம் என ஆசிரியர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்குகிறது. நேரடியாக அந்தந்த பள்ளிகளுக்கே வழங்க வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அரசு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்கிறது.
தற்போது 2024--25ம் கல்வி ஆண்டுக்குரிய மூன்றாம் பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் வாகன வாடகைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில்ஆசிரியர்கள் சொந்த செலவில் வாகனத்துடன் வந்து புத்தகத்தை எடுத்து செல்லுமாறு கல்வி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
இது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலியாக மாவட்டத்திற்கு ரூ.15 லட்சம் வரை அரசு ஒதுக்கியுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட புத்தக வினியோகத்திற்கும் ரூ.12 முதல் 15 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், கல்வி அதிகாரிகள் இந்த செலவை ஆசிரியர்கள் மீது சுமத்துகின்றனர்.
எனவே ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் புத்தகம் எடுக்குமாறு சொன்னால் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment