மாற்றுத்திறன் மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழிநடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்க கல்வி பயிற்சி இணைய வழியில் நடத்தப்படுகிறது. சர்வர் பிரச்சினையால் இணைப்பு கிடைக்காமல் ‘சுற்றிக்கொண்டே’ இருப்பதால் பயிற்சி பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
இப்பயிற்சி டிச. 14 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றதை எல்எம்எஸ் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்தால் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்காக எமிஸ் இணையதளம் மூலம் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது பயனர் கணக்கு மூலம் உள் நுழைந்து பயிற்சி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிச. 14-ம் தேதி முதல் பயிற்சி பெற ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து பார்த்தபோது அந்த இணையதளம் கிடைக்கவில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக ‘சுற்றிக்கொண்டே’ இருப்பதால் ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இதனால் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், மாற்றுத்திறன் மாணவர்களையும் மற்ற மாணவர்களோடு சேர்த்து கற்பிக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள காணொலி வாயிலாக உள்ளடக்க கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி 1 முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்கள் ‘எமிஸ்’ வழியாக எல்எம்எஸ் இணையதளத்தில் டிச.14-ம் தேதி முதல் 2025 ஜனவரி 10-ம் தேதி வரை பயிற்சி நடைபெறுகிறது.
ஆனால் பயிற்சி தொடங்கி 4 நாட்களாகியும் அந்த இணையதளம் சர்வர் பிரச்சினையால் இணைப்பு கிடைக்கவில்லை. அந்த வலைதளப் பக்கத்தில் நுழைந்தால் ‘சுற்றிக்கொண்டே’ இருக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கும் தலைச்சுற்றல் வருகிறது. இப்படி இருந்தால் எப்படி ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது? ஆசிரியர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் பயிற்சி முன்னேற்ற அறிக்கை விவரத்தை tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பச் சொல்லியுள்ளனர். எனவே தமிழக அரசு சர்வர் பிரச்சினையை போக்கி இணையதள பக்கத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment