நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று காலை 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூடி, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 2013ல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின், ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுகளை நடத்தவில்லை.
கடந்த 11 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு, பதவி உயர்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த பிப்., 4ம் தேதி, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு மட்டும், ஆசிரியர் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது.
அதில், 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 37,000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது, ஆசிரியர் தேர்வாணையம், 3,192 காலியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இது, பட்டதாரி ஆசிரியர் பயிற்சிகளையும், தகுதித்தேர்வையும் முடித்து, அரசு வேலைக்காக, 11 ஆண்டுகள் காத்திருந்த எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி, அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு பணி வழங்கும் வகையில், காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment