பள்ளி ஆய்வு பணியில் கல்வி அதிகாரிகள் மெத்தனம்: கேள்விக்குறியாகி வரும் மாணவர்களின் பாதுகாப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/11/2024

பள்ளி ஆய்வு பணியில் கல்வி அதிகாரிகள் மெத்தனம்: கேள்விக்குறியாகி வரும் மாணவர்களின் பாதுகாப்பு

 

 

1335789

பள்ளி ஆய்வு பணியில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 25-ம் தேதி வகுப்பறையில் வாயு பரவி 39 மாணவிகள் மயக்கம் அடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் அப்பள்ளியில் நேற்று மீண்டும் 4 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். முதல் சம்பவம் நடந்தபோது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியிலேயே முற்றுகையிட்டு தொடர் ஆய்வு மேற்கொண்டபோதிலும் இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.


பள்ளி அருகேயுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு பரவியிருக்குமா அல்லது பள்ளி ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருட்களில் இருந்து வாயு வெளியேறி இருக்குமா என பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.தொடர் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, விஷவாயு கசிவுக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படாமல் பள்ளியை திறந்துவிட்டீர்களே? என குற்றச்சாட்டை வைத்ததுடன் இச்சம்பவம் தொடர்பான போலீஸ் அறிக்கை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அறிக்கை எங்கே என்பதையும் கேட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்கள் முன்வைத்துள்ள கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை.


பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கிடையே, கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 95 குழந்தைகள் உயிரிழந்த துயரமான சம்பவத்துக்குப் பிறகு பள்ளி பாதுகாப்பு நடைமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. பள்ளிகளில் கட்டிட வரைபட அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும், பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறு, நீர்த்தேக்க தொட்டிகள், செப்டிக் டேங்க் ஆகியவை பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்கூரைக்கு செல்லும் வழிமூடப்பட்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளி ஆய்வகத்தில் வெப்பம் வெளியேற வெப்பப்போக்கி அமைக்க வேண்டும்.


மின்சார இணைப்புகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிதிலமடைந்த கட்டிடம், சுவர் போன்றவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆபத்து காலங்களில் முதலுதவி செய்ய வசதியாக முதலுதவிப் பெட்டி வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் முழுநேர மருத்துவ சேவை வசதி ஏற்படுத்த வேண்டும் என விதிமுறைகள் நீள்கின்றன. இந்த விதிமுறைகள் எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டியது ஆய்வு அதிகாரிகளின் முக்கியப் பணி. வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி

அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு களஆய்வு செய்யும்போதுதான் பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரியவரும்.


ஆனால், அலுவலக பணிச்சுமை, வேறு நிர்வாகப் பணிகள் போன்ற காரணங்களினால் பெரும்பாலான ஆய்வு அதிகாரிகள் பள்ளிகளில் வருடாந்திர ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. ஒருவேளை ஆய்வு செய்தாலும் பெயரளவுக்கு இருக்கும் என்பதுதான் யதார்த்தம். அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கள ஆய்வு மேற்கொள்ளுங்கள் என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இதையே பள்ளி மாணவர்களின் பெற்றோரும் வலியுறுத்துகின்றனர்.


அவர்கள் மேலும் கூறும்போது, "பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, ​​​​மாணவர்கள் அதிக விபத்து அபாயத்தை எதிர்கொள்கின்றனர். கல்வி அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியையும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது கண்டிப்பாக ஆய்வுசெய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு ஆய்வு செய்வது கிடையாது.


நேரடி ஆய்வு மேற்கொண்டால்தான் அந்த பள்ளியின் உண்மை நிலவரம் அதிகாரிகளுக்கு தெரியவரும். மாணவர்களின் நேரடி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கூடாது. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே அங்கீகாரம் வழங்க வேண்டும்" என்றனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459