‘நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்தின் கீழ் ரூ.260 கோடிக்கு பணிகள்: அமைச்சர் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/11/2024

‘நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்தின் கீழ் ரூ.260 கோடிக்கு பணிகள்: அமைச்சர் தகவல்

 

 

1338564

நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்தின் கீழ் ரூ.260 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.


கோவை கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மார்டின் குழுமத்தின் சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய பள்ளிக் கட்டிடத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (நவ.11) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் சுமார் 1.27 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர்.


தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘நம்ம பள்ளி நம்ம ஊரு’ திட்டத்துக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தின் நிதி ரூ.380 கோடிக்கு மேல் உள்ளது. இதில் ரூ.260 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 14,109 வகுப்பறை கட்டிடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, 7856 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு ரூ.2,467 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.


கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரூ.171 கோடியில் 141 பள்ளிகளில் உள்ள 754 வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வியையும், சுகாதாரத்தையும் தனது இரண்டு கண்களாக பார்க்கிறார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.455 கோடியில் 22,931 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் 311 பள்ளிகளில் ரூ.19.89 கோடி மதிப்பில் 678 பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ரூ.44,042 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கல்விகுழுத் தலைவர் மாலதி, மண்டலக் குழு தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மார்டின் குழுமம் இயக்குநர் லீமாரோஸ் மார்டின், நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பி.வி.பி.முத்துக்குமார், பள்ளி ஆசிரியர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459