கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தனியார் பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தேவையின்றி மேல்முறையீடு செய்ததாகக்கூறி தள்ளுபடி செய்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.குளச்சல் வி.கே.பி.மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த வின்சென்ட் 2016 ல் ஓய்வு பெற்றார். அக்காலிப் பணியிடத்தில் பட்டதாரி உதவி ஆசிரியராக சஜிதா நாயர் 2017 ல் நியமிக்கப்பட்டார். அதற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி அப்பள்ளி நிர்வாகம் தக்கலை கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்தது.
அவர்,'அப்பள்ளியில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர்,' எனக்கூறி நிராகரித்தார். இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. தனி நீதிபதி,'ஒப்புதல் அளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர், கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு சஜிதா நாயர் தகுதியானவர் என்பதில் சர்ச்சை இல்லை. 2016-- -17 கல்வி ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயம் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாகக்கூறி ஒப்புதல் அளிப்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதன் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கான நியமனத்திற்கு ஒப்புதல் அளிப்பதை நிராகரிக்க முடியாது என இந்நீதிமன்றம் பலமுறை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஒப்புதல் அளிக்க தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அமர்வு மூலம் தீர்வு காணப்பட்ட விஷயங்களில்கூட கல்வித்துறை மேல்முறையீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுபோன்ற தேவையற்ற மேல்முறையீடுகளை தினசரி சந்திக்கிறோம். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர் உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தொகையை சென்னை காந்திநகர் கான்கேர் பவுண்டேஷனுக்கு செலுத்த வேண்டும்.
இத்தொகையை கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அரசு வசூலிக்கலாம்.ஆசிரியர் நியமனத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்காவிடில் 4 வாரங்களுக்குள் அங்கீகரிக்கும் உத்தரவை அதிகாரிகள் பிறப்பிப்பர் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. சம்பள நிலுவைத் தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்
No comments:
Post a Comment