பருவமழைக் காலங்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவமழைக் காலத்தில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்கக்கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கிய அறிவுறுத்தல்கள் விவரம்: பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்துவித பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். மேலும், நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.
இதுதவிர, பழைய கட்டிடங்களை பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், பள்ளிக் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பள்ளிக்கல்வித் துறையினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும் தீவிரமாக காண்காணிக்க வேண்டும். மேலும், பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்த பின்னர் சென்னை திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ், அதன் வளாகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment