மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/10/2024

மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு

 தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2018-ல் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில் கடந்த 2018-ல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட உத்தரவிடப்பட்டது.



தொடர்ந்து, அதே ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உரிய இடங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று, பழைய அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியிடங்களும் புதிய அலுவலகத்துக்கு பணி நிரவல் மூலம் மாற்றம் செய்யப்பட்டன.


பணி நிரவல் மூலம் நிரப்பப்பட்ட நிரந்தர பணியிடங்கள் போக மீதமுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு கடந்த 2021 ஆக.10 முதல் 2024 மே 31-ம் தேதி வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்து கடந்த ஆக.31 வரை ஊதியம் வழங்க இரு முறை தற்காலிக நீட்டிப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில், இந்த 197 பணியிடங்களுக்கு நிகழாண்டு செப்.1 முதல் அடுத்த ஆண்டு பிப்.28 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர், அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதனை ஏற்று மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலகப் பணியிடங்களாக மாற்றம் செய்து, 52 அலுவலகங்களிலுள்ள 197 தற்காலிக பணியிடங்களுக்கு 1.9.2024 முதல் 31.11.2024 வரை மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.


மேற்கண்ட அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459