விகடன் பதிவு முன்னெடுப்பு
இடமாறுதலில் சென்ற கல்வி அலுவலர்; கலங்கி அழுத ஆசிரியர்கள்; திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
திருவாரூர் முதன்மை கல்வி அலுவலருக்குப் பணி இடமாறுதல் ஆணை வந்த நிலையில் அவருக்கு ஆசியர்கள் பிரிவு உபசார விழா நடத்தினர். இதில் முதன்மை கல்வி அலுவலருக்காக ஆசிரியர்கள் கலங்கி அழுத சம்பவம் நெகிழ வைத்திருக்கிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு பள்ளியில் பணியாற்றி விட்டு வேறு பள்ளிக்கு இடமாறுதலில் செல்கின்றபோது, அந்த பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட அந்த ஆசிரியருக்காக அழுவதும், பதிலுக்கு அந்த ஆசிரியர் கலங்குவதும், ஏன் ஆசிரியரின் இட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்திய செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருவாரூரில் முதன்மை கல்வி அலுவலர் இடமாறுதலில் சென்ற நிலையில் அவருக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
கல்வித்துறையில் இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியிருக்கின்ற நிலையில் முதன்மை கல்வி அலுவலருக்காக ஆசிரியர்கள் ஏன் அழுதார்கள், அப்படி அவர்களுக்கு அந்த முதன்மை கல்வி அலுவலர் என்ன செய்தார் என்பதை அறிந்த பலரையும் இந்த சம்பவம் நெகிழ வைத்திருக்கிறது.
இது குறித்து ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேசினோம். "தஞ்சாவூர், அம்மாபேட்டை அருகே உள்ள களஞ்சேரி கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் புகழேந்தி. இவர் முதன்மைக் கல்வி அலுவலராக தென்சென்னை, திருவண்ணாமலை, விருதுநகர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்பது இவருக்கான தனித்த அடையாளம்.
பணி மாறுதலில் கடந்த 2023 மே மாதம் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிக்கு வந்தார். அவர் பணியைத் தொடங்கிய நாளில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. புகழேந்திக்கு வாழ்த்துச் சொல்ல கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காத்திருந்தனர். இவரோ, மாவட்ட அளவில் பிளஸ் டூ-வில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவியை அவரது குடிசை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். இந்த சம்பவம் அப்போது கல்வித்துறை வட்டாரத்தில் பேசு பொருளானது.
பணியில் கண்டிப்பு காட்டினாலும், பழகுவதில் கனிவாக நடந்து கொள்வார். ஊதிய பலன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டியவற்றைத் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்தார். ஆசிரிய, ஆசிரியர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டு அதைத் தீர்த்து வைத்தார். பொதுவாக முதன்மை கல்வி அதிகாரிகளாக இருப்பவர்கள் பள்ளியில் ஆய்வு செய்கின்ற போது மாணவர்களின் குறைகளை மட்டும் கேட்பார்கள். இவர் ஆசிரியர்களின் குறைகளையும் கேட்டார். அதோடு இல்லாமல் அவற்றை உடனடியாக சரி செய்து கொடுப்பார். அவருடைய செயலால் அனைத்து ஆசியர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்கள் படிப்பில் நிறையவே அக்கறை காட்டுவார். 'மாணவர்களை முதலில் உற்சாகப்படுத்தவேண்டும், அப்பத்தான் அவர்கள் நல்லா படிப்பாங்க'னு ஆசிரியர்களிடத்தில் வலியுறுத்துவார். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிவதில் தனிக் கவனம் செலுத்தி மீண்டும் பள்ளியில் படிக்க வைத்தார். 'கல்வி கற்றுத் தருவது என்பது வேலையல்ல, வாழ்க்கைக்கான வழிகாட்டல். ஒரு மாணவன் உயர்ந்த நிலைக்குச் செல்கின்றபோது பாடம் சொல்லித் தந்த ஆசிரியரை மறக்காமல் நினைப்பான், அதை உணர்ந்தாலே போதும்' என ஆசியர்களையும் உற்சாகப்படுத்துவார்.
இதுவே முதன்மை கல்வி அலுவலருக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு நெருக்கமாகக் காரணமானது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருக்குச் சென்னை முதன்மை கல்வி அலுவலராகப் பணி மாறுதலுக்கான ஆணை வந்தது. இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அதிகாரியாக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர் நம்மை விட்டு வேற ஊருக்குச் செல்கிறாரே எனக் கவலையடைந்தனர். அரசு வேலையில் இப்படி நடப்பது சகஜம் தானேனு அவருக்கு உரிய மரியாதை செய்து வழியனுப்பி வைக்க நினைத்தோம்.
இதற்காகத் திருவாரூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிரிவு உபசார விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். அப்போது இவரது பணியை நினைவு கூர்ந்து பேசிய ஆசியர்கள் பலரும் கலங்கி அழுதனர். இதைப் பார்த்த புகழேந்தி சாரும் அழத்தொடங்கினார். இதை யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பல நிமிடங்கள் அந்த அறை அமைதியாக மாறியது. சிலர், சார் இங்கேயே இருப்பதற்கு வாய்ப்பிருக்கானு அழுதுகொண்டே கேட்டார்கள். கடைசியாக மைக் பிடித்த புகழேந்தி, பேச முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நின்றார். ஆசிரியர் பணி மாறுதலில் செல்கின்ற போது மாணவர்கள் அழுவதைப் பார்த்திருக்கிறோம். முதன்மை கல்வி அலுவலருக்காக ஆசிரியர்கள் அழுதது இதுதான் முதல் முறை. அப்படியென்றால் அவர் எவ்வளவு மேன்மையான அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்" என்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் தங்கபாபு கூறியதாவது, "எனது 27 வருட ஆசிரியர் பணி அனுபவத்தில் இப்படி ஒரு நெகிழ்ச்சியான பணி மாறுதல் வழியனுப்பு நிகழ்வினை நான் கண்டதில்லை. எத்தனையோ அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பணி மாறுதலிலோ பதவி உயர்விலோ வேறு மாவட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு அதிகாரி நேர்மையாகவும், உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் இருந்தால் அந்த அதிகாரியைச் சமூகம் எப்படிக் கொண்டாடும் என்பதற்கு ஒரு ஆகச் சிறந்த உதாரணம்தான் எங்கள் சி.இ.ஓ-விற்கு நடந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி தான்.
கல்வி அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் தனது தனித்த மேன்மையான செயலால், ஏழை எளிய மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்கிற அக்கறையோடு உழைப்பவர்கள் மட்டுமே சிறந்த கல்வி அதிகாரிகளாகச் சிறக்கிறார்கள். அந்த வகையில் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கொண்டாடப்பட வேண்டியவர். எத்தனையோ கவிதைகள் நான் எழுதி இருக்கிறேன். ஒரு நேர்மையான அதிகாரியான புகழேந்தி சாருக்கு கற்பனை கலப்பில்லாமல் கவிதை எழுதி வாசித்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment