பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுகளால் வகுப்பறை அழுத்தம் குறையுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




02/10/2024

பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுகளால் வகுப்பறை அழுத்தம் குறையுமா?

1319788

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் கடந்த வாரம்200-வது பள்ளியை பார்வையிட்டார். இத்தகைய பள்ளி ஆய்வின்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் என்ன, கூடுதல் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை பேசுவோம் வாருங்கள்.


முன்னதாக, ‘குழு ஆய்வு’ என்ற சொல் பள்ளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதைக் கேட்பார்கள், இதைக் கேட்டார்கள், இத்தனை ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருங்கள் என்று பல விதமான வாட்ஸ் அப்பகிர்வுகள் இருப்பது வழக்கம். இதுதவிர பள்ளி ஆண்டாய்வு என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி அலுவலர்களால் ஆய்வு நடத்தப்படுகிறது. அதனால் பெரும்பாலும் பள்ளிச் செயல்பாடுகள், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அன்றே விளக்கக்கூட்டமும் நடத்தப்படுகிறது.


இதோ, காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்ததும் 15 தலைப்புகளில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வை மேற்கொள்ளப் போகிறார்கள். மாவட்ட ஆட்சியர் போன்ற அரசு அலுவலர்களாலும் பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அனைத்துமே பரபரப்புச் செய்திகளாகின்றன. சமீபத்தில் எல்லோரும் பாராட்டும் படியான பள்ளி ஆய்வைச் செய்துவருகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


குழந்தைகளோடு கலந்துரையாடல்: பரபரப்பு ஏதும் இல்லாமல் எல்லோரும் விரும்புவதாகக் கல்வி அமைச்சரின் ஆய்வு முறை இருக்கிறது. ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிடுகிறார். குழந்தைகளை வாசிக்கச் சொல்லுகிறார். குழந்தைகளோடும் ஆசிரியர்களோடும் தன்மையாகக் கலந்துரையாடுகிறார். அரசின் திட்டங்கள், பள்ளியில் உள்ள வசதிகள், தேவைகள் குறித்தும் கேட்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதியிலும் நிகழும் அவரது நேரடி ஆய்வு விரைவில் நிறைவடையப் போகிறது. அமைச்சரின் ஆய்வு முன்னுதாரணமாகப் பாராட்டப்படுகிறது.


அவரது அறிக்கை வெளியாகும்போது முழுமையான விவரங்கள் தெரியவரும். கட்டிடம், கழிப்பறை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குதல், ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் குறைத்தல், பணியிடங்களை நிரப்புதல் போன்ற முக்கியப் பணிகள் குறித்து அமைச்சரவை மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற ஏராளமான மாற்றங்கள் கல்வி அமைச்சரின் நடவடிக்கைகளால் ஏற்பட வேண்டும்.


அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வுகள் மிகவும் அவசியம். அரசின் திட்டங்கள், ஆசிரியர் செயல்பாடுகள், குறித்த ஆய்வுகளும் அவசியம். அவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்பட வேண்டும்.


தேவைப்படும் மாற்றம்! - இதுதவிர கல்வியில் மாற்றம் அவசியப்படுகிறது. ஏற்கெனவே கல்வியில் மாற்றம் குறித்த உரையாடல்களும் திட்டங்களும் மேலிருந்து பள்ளிக்குள் வருகின்றன. எத்தனையோ திட்டங்கள் வந்த பிறகும் வாசிப்பதில் குறைபாடு தொடங்கி ஆசிரியர் மாணவர் உறவு, நடத்தை மாற்றங்கள், சமூகச்சிக்கல்கள் போன்ற நடைமுறை பிரச்சினைகள் வகுப்பறைக்குள், பள்ளிக்குள் இருக்கின்றன. NAS, SLAS போன்ற அடைவுத்தேர்வுகளின் முடிவு

களை மட்டுமே நம்பி உருவாக்கப்படும் திட்டங்களால் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.


வகுப்பறைகளில், பள்ளியில், சமூகத்தில் கற்றல் கற்பித்தலில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்த ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் அவசியமாகிறது. குழந்தைகள், ஆசிரியர், பெற்றோர் ஆகியோரிடமிருந்து கலந்துரையாடல் தொடங்க வேண்டும்.எதிர்காலத்துக்கு ஏற்ற பாடத்திட்டம், சுமையற்ற பாடப்பொருள், குழந்தை நேயமான கற்றல் கற்பித்தல் முறைகள், வளரிளம் பருவத்தினர் நடத்தை மாற்றம் போன்றவை குறித்து பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடிச் செயல்பாடுகளை உருவாக்க வேண்டும்.


ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் கொண்டு வருதல், ஆசிரியர் பணி அறத்தை வளர்த்தல், தேவைகளில் இருந்து ஆசிரியர் திறன் வளர் பயிற்சிகள், பள்ளி அளவு, குறுவட்ட அளவில்ஆசிரியர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் கூட்டங்கள், பல்வேறு நிலைகளில் உள்ள ஆசிரியர் சங்கங்களோடு கலந்துரையாடுதல் போன்ற மாற்றங்கள் உடனடித் தேவையாக இருக்கின்றன.


காலங்காலமாக மாற்றங்களின் பெயரால், பல்வேறு திட்டங்களால் வகுப்பறை அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இன்றைய கல்விச் சூழல் குறித்த முழுமையான திறனாய்வும் அதனடிப்படையில் தேவையான மாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலம் என்ற நிலை மாற்றங்களிலும் தொடர வேண்டும்.


- கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர்;தொடர்புக்கு: artsiva13@gmail.com

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459