தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல் - ஆசிரியர் மலர்

Latest

 




06/10/2024

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்

 


1322301

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது.


இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி அந்த ஆண்டு 1,325 சிறப்பு ஆசிரியர்பணியிடங்களுக்கு டிஆர்பி போட்டித் தேர்வை நடத்தியது. முதல்கட்டமாக 2019-ல் ஓவியம்,தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களும், அதன்பிறகு 2020-ல் உடற்கல்வி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்அடிப்படையில் சிறப்பு ஆசிரியர் பதவிக்கான பொது தேர்வு பட்டியலுடன் தமிழ்வழி ஒதுக்கீடு தற்காலிக தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்வழி ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளால் தேர்வுப் பட்டியல் பின்னர் ரத்து செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று, பின்னர் அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்தன. ஆனாலும் தமிழ்வழி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படவில்லை.


தமிழ்வழி ஒதுக்கீடு அல்லாத பொது பட்டியலில் தேர்வானவர்கள் அடுத்தடுத்து பணியில் சேர்ந்து, பலர் பதவி உயர்வும் பெற்றுவிட்டனர். இதற்கிடையே, பொது தேர்வு பட்டியலில்ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டு காலியிடங்கள் அந்தந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அதற்கான தேர்வுப் பட்டியல் கடந்த 2021 அக்.12 அன்றுவெளியிடப்பட்டது.


3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அந்த தேர்வுப் பட்டியலை சம்பந்தப்பட்ட துறைக்கு(பள்ளிக் கல்வி, சமூக பாதுகாப்புத் துறை, மாநகராட்சி நிர்வாகம்)முழுமையாக அனுப்பவில்லை. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்களில் சிலர்நீதிமன்ற உத்தரவை பெற்று பணியில் சேர்ந்து வருகின்றனர்


இதனிடையே சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வர்கள் கடும் மனஉளைச்சலில் உள்ளனர்.


இதுகுறித்து தேர்வர்கள் கூறும்போது, "தமிழ்வழி ஒதுக்கீடு இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிடுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஒருவேளை இந்த ஒதுக்கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த இடங்களை தமிழ்வழி அல்லாத பொதுப்பிரிவுக்கு மாற்றி குறிப்பிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினரைக் கொண்டே நிரப்ப முடியும். எனவே, தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியலை டிஆர்பி உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459