TNPSC - குரூப் 1 இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

 




07/09/2024

TNPSC - குரூப் 1 இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி வழக்கு

 1306793

குரூப் 1 பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்தக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சுபிட்ச துர்கா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த மார்ச் 28-ம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சில பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அவை கிடைமட்ட (horizontal) ஒதுக்கீட்டில் இல்லாமல், செங்குத்து (vertical) ஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சிறப்பு ஒதுக்கீடுகள் கிடைமட்டமாகவே செய்யப்பட வேண்டும். செங்குத்தாக அல்ல என்பதை பலமுறை உறுதி செய்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை.


குரூப்-1 தகுதி பட்டியலிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 2016ல் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவும் முறையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் இட ஒதுக்கீட்டு நடைமுறையின் முழு பயனும் கிடைப்பதில்லை.


கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியிடப்பட்ட குரூப் 1 அறிவிப்பில் பணியிடங்களில் செய்த இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும். அதோடு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவை எந்த ஆண்டில் இருந்து காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களையும் வெளியிட உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கினை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு CLICK HERE 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459