மதுரைப் புத்தகக் காட்சியின் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் கருப்பசாமி குறித்த பாடல் இடம்பெற்றதும் அதற்கு மாணவிகள் சாமி ஆடியதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அரசு விழாக்களில் ஆன்மிக நோக்கிலும் மூடநம்பிக்கையைப் பரப்பும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தியது தவறு எனச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிவிட்டாலும், அது வேறு சில முக்கியமான கேள்விகளை எழுப்பிவிட்டுச் சென்றுள்ளது. அவற்றுக்குச் சரியான பதில் தேடுவது, இதுபோல மீண்டும் ஒரு சர்ச்சை எழுவதையும் தவிர்க்கும்.
நடந்தது என்ன? - புத்தகக் காட்சியின் தொடக்க விழா மாலையில் நடைபெற்றது. அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், அதிகாரிகள் போன்றோர் பேசி முடித்த பின், கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அரசு விழாக்களில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இவ்விழாவிலும் பறையிசை, மயிலாட்டம், மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம் போன்றவை நிகழ்த்தப்பட்டன. தொழில்முறைக் கலைஞர்களும் மதுரை பசுமலை அரசு இசைக் கல்லூரி மாணவர்களும் இணைந்த குழுவினர் இவற்றை நிகழ்த்தினர்.
புத்தகக் காட்சிகளுக்குப் பள்ளி மாணவர்கள் வருவதை அரசு ஊக்குவிக்கிறது. எனவே, பார்வையாளர்களில் அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். பறையிசையின் பின்னணியில் அனைத்து ஆட்டங்களையும் பார்வையாளர்கள் கைதட்டி ரசித்தனர்.
நிறைவாக, சாமியாட்டம் ஓரிரு நிமிடங்களுக்கு நடந்தது. மறைந்த நாட்டுப்புறப் பாடகரான தேக்கம்பட்டி சுந்தரராஜன் பாடிய ‘அங்கே இடி முழங்குது, கருப்பசாமி தங்கக் கலசம் மின்னுது’ பாடல் தென் மாவட்டங்களில் நன்கு பரிச்சயமானது. அந்தப் பாடலுக்கு கருப்பசாமி வேடமணிந்து பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கலைஞர் ஆடினார். அவர் பசுமலைக் கல்லூரி மாணவர். அவரது வேடமும் முகபாவமும் பாடலின் தாளகதியும் பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தின.
.
ஆண், பெண் வேறுபாடு இன்றிப் பல மாணவர்கள் ஆடினர். சில மாணவிகள் சாமியாட்டத்தை வெளிப்படுத்தினர். கோயில் திருவிழாக்களில் சாமி வந்து ஆடுவதுபோல ஆவேசமாக ஆடினர். சிலர் மயக்கமடைந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பியதும், அம்மாணவிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டனர். எனினும், அந்தப் பரபரப்பு மறையவில்லை. அதுவரை நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மாணவிகள் மயக்கமடைந்ததும் அதற்குக் கருப்பசாமி பாடல் காரணமானதுமே முதன்மையாகப் பேசப்பட்டன.
கருப்பசாமி பாடல்: மதச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில், அரசு விழாக்களிலோ, பள்ளி விழாக்களிலோ குறிப்பிட்ட சமயத்தை மட்டும் பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் இடம்பெறக் கூடாது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இதை அப்படியே ஒற்றைப் பரிமாணத்தில் பின்பற்ற முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வங்களை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறோம்?
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ‘வேலன் வெறியாட்டு’ என்று சாமியாடுதல் குறிப்பிடப்படுகிறது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் தேவராளன் ஆட்டம் என்கிற ஆட்டம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயில் சடங்குகளில் கோமரத்தாடி, சுடலை கொண்டாடி, அம்மன் கொண்டாடி, சாமியாடி என்றெல்லாம் அழைக்கப்படும், சாமியாடிகள் இருப்பார்கள். இவர்களைத் தவிர, கோயில் திருவிழா, கொடை நிகழ்ச்சிகளில் பக்தர்கள் சிலரே சாமியாடுவதையும் காணலாம்.
மதுரைப் பகுதி மக்களின் பண்பாட்டில் இரண்டறக் கலந்துவிட்ட நாட்டார் தெய்வம் கருப்பசாமி. அழகர் கோயில் பண்பாட்டு நிகழ்வுகளில் கருப்பசாமி வழிபாடு ஒரு முக்கியமான அங்கம். கருப்பசாமிக்கு, இதுபோலப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. கேட்போரைத் தன்வயப்படுத்தி எழுந்து ஆடச் செய்வது அவற்றின் இயல்பு. துக்க வீடுகளில்கூட கருப்பசாமியை வணங்கிச் சாமியாட்டம் ஆடுவது வழக்கம். இப்படி மதுரை வட்டார நாட்டார் வழக்காறுகளில் தவிர்க்க இயலாத ஒரு முகமாக கருப்பசாமி இருக்கிறார்.
பொதுவாக, இவ்வட்டாரத்தில் நடைபெறும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள், குரு வணக்கத்தில் தொடங்கி கருப்பசாமி பாடலில் நிறைவடைவதாகவே உள்ளன. பத்ம விருதுபெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கலைமாமணி துறையூர் முத்துக்குமார், கோட்டைச்சாமி, ஆறுமுக மாரியம்மாள் போன்றோர் கருப்பசாமி பாடல்களுக்காகவும் அறியப்படும் கலைஞர்களே. மாணவிகள் சாமியாடியதாலேயே, கருப்பசாமி பாடல் கண்டனத்துக்குரிய ஒன்றாக ஆகிவிடாது.
சாமியாடுதல்: சாமியாடுவதன் உளவியல் பின்னணி குறித்த செய்திகள் அறிவுச் சமூகத்துக்குப் புதிதல்ல. கோயில் கொடைகளில் இரு பாலரும் சாமியாடினாலும், ஆண்கள் தெய்வத்தின் பிரதிநிதியாக ஆடுவர். அது கோயிலை மையமாகக் கொண்ட சமூகம், அவர்களுக்கு வழங்கும் அதிகாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. அதே விழாக்களில் பெண்கள் ஆடுவது அதிகாரத்துக்கு வெளியே நிகழ்வதாகவே உள்ளது. தெய்வத்தை வணங்க வந்தவர்களே திடீரென தெய்வமாகத் தங்களை உணரும் நிலையை இதில் காண்கிறோம்.
சாமியாடுவது, அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு எனவும் பெண்களுக்கு அதற்கான தேவைகள் அதிகம் உள்ளன எனவும் உளவியல் நோக்கில் கூறப்படுகிறது. நாட்டார் தெய்வக் கோயில்களில் வழிபடுபவர்கள், அதிலும் பெண் பக்தர்கள் ஏன் அதிகமாகச் சாமியாடுகிறார்கள் என்கிற கேள்வி முக்கியமானது. கருப்பசாமி பாடலுக்கு மாணவர்கள் இரு பாலரும் ஆடியதில் கொண்டாட்ட மனநிலை வெளிப்பட்டது.
அவர்களுக்கும் கருப்பசாமிக்குமான மன நெருக்கத்தையும் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். மாணவிகள் அதிகமாகச் சாமியாடியதில், கூடுதலாகச் சில உளவியல் தேவைகளும் உள்ளன என்கிற புரிதலுக்கு வர முடியும். படிப்பு, தேர்வு, குடும்ப நிலை, பொருளாதாரம் போன்றவை தொடர்பான மன அழுத்தம் அவர்களுக்கு உள்ளதா என்கிற கேள்விக்கு, அவர்கள் மீது அக்கறை உள்ள சமூகம் பதில் தேட வேண்டும்.
மாணவர்கள் தொழில்முறைக் கலைஞர்கள் அல்ல. திடீரென உணர்வுநிலைக்கு ஆட்பட்டு, சில நிமிடங்கள் ஆடுவது அவர்களுக்கு முற்றிலும் புதியது. அப்படி ஆடும்போது அவர்கள் மயக்கம் அடைவதும் இயல்புதான். திருவிழாக்களில் பெண்களுக்கு வரும் சாமியாட்டங்களும் பெரும்பாலும் மயக்கத்தில்தான் முடிகிறது. சுற்றியிருப்பவர்களின் ஒத்தாசையுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவர்.
இதேதான் அந்த மாணவிகளுக்கும் நடைபெற்றது. பள்ளிக்கூடத்தில் காலை அணிவகுப்பில் மாணவர்கள் மயக்கமடைந்து விழுவதை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். மாணவரின் உடல்நிலை, அவர் காலை உணவு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு, அது கோடைக்காலம் எனில் தட்பவெப்பநிலையின் பங்களிப்பு போன்றவைதான் இத்தகைய நிகழ்வுகளில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
எதன் மீதும் வெறுப்பு முத்திரை குத்திப் புறக்கணிப்பது மிக எளிது. ஆனால், அப்படிச் செய்யும்போது சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டதாகவும் அது இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குறித்துப் பிற்போக்குத்தனமாக மஹாவிஷ்ணு பேசிய நிகழ்வையும் கருப்பசாமி பாடலுக்கு மாணவிகள் சாமியாடியதையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.
இழப்பு யாருக்கு? - இறுதியில், சரமாரியான விமர்சனங்களுக்கான விலையைக் கொடுத்தவர்கள் - சம்பந்தப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்தான். இனி அரசு விழாக்களில் இத்தகைய நாட்டுப்புறக் கலைகள் தவிர்க்கப்படும் நிலை உருவாகும். இது தேவையற்ற ஊகமோ, மிகையான அச்சமோ அல்ல. ஏற்கெனவே நாட்டுப்புறக் கலைகளின் சமூக, பொருளாதார நிலை வருந்தத்தக்க நிலையில்தான் உள்ளது.
கலைஞர்கள் கூடுதலாகச் சந்திக்கவுள்ள இழப்பை அரசு நிர்வாக நடைமுறைகளைப் புரிந்துகொண்டவர்கள் உணர முடியும். விமர்சனங்களை மீறி, நிகழ்ச்சிகளில் இந்தக் கலைஞர்களுக்கு இடம் அளிக்க அரசு அதிகாரிகள் இனித் துணிய மாட்டார்கள். இந்த நிகழ்வை ஒட்டிப் பள்ளிக் கல்வித் துறை விமர்சனத்துக்கு உள்ளானதையும் மதுரை மாவட்டத் தலைமைக் கல்வி அதிகாரி கார்த்திகா, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதையும் தனித்தனி நிகழ்வுகளாகப் பார்க்க முடியாது. மாணவிகள் சாமியாடிய நிகழ்வுதான் திடீர் இடமாறுதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிகாரியே நடவடிக்கைக்கு உள்ளாகும்போது, நாட்டுப்புறக் கலைஞர்கள் எம்மாத்திரம்?
கருப்பசாமி வேடமணிந்து ஆடுவது சாமியாட்டம் என்பதன் ஒரு பகுதியே. அம்மன் கூத்திலிருந்து ஜிம்ப்ளா மேளம் வரை இசைக் கல்லூரிக்கான பாடத்திட்டத்தில் ஏராளமான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. இவற்றில் பல கலைகள் தெய்வத்துடன் தொடர்புடையவைதான். எனினும் ஆன்மிக வட்டத்துக்குள் அவை அடைபட்டுவிடுவதில்லை. அவற்றில் சாமியாட்டமும் ஒன்று. பாடமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலைதான் விமர்சனங்களில் இழிவானதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
மதுரை நிகழ்ச்சியில் ஆடிய மாணவர், சாமியாட்டத்தில் நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டுவருபவர். அவருக்கு அது தொழிலாகவும் உள்ளது. இத்தகைய கலைஞர்களுக்குச் சோறு போடும் ஒரு நாட்டுப்புறக் கலையை அவர்களே வெறுத்து ஒதுக்க வைக்கும்படி செய்வதுதான் பிரச்சினைக்குத் தீர்வா எனச் சமூக அக்கறை உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment