அண்ணாமலை பல்கலை., பி.லிட் பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது; அரசு அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/09/2024

அண்ணாமலை பல்கலை., பி.லிட் பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது; அரசு அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

 1316605

அண்ணாமலை பல்கலை.யில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் 394 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 2222 ஆசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 25.10.2023 ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை 518 தமிழாசிரியர்கள் உட்பட மொத்தம் 3192 என அதிகரிக்கப் பட்டது.


இந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 24 ஆம் நாள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.


.


தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.


சென்னையில் கடந்த 11.04.2023 ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத் தகுதி நிர்ணயக் குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இம்முடிவு இரு வகைகளில் தவறு.


முதலாவதாக, 06.09.2012 ஆம் நாள் நடைபெற்ற சமத் தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சமத்தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் தான் அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், பி.ஏ., தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது அல்ல என தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டங்கள் அனைத்தும் சென்னை பல்கலையின் பி.லிட். தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்ற அனைவரும் தமிழாசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள் தான்.


இரண்டாவதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 25.10.2023 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின் 38 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது இணைப்பில் வரிசை எண் இரண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பி.லிட் பட்டங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டத்திற்கு இணையானவை என 20.09.2012 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது எனும் போது, அண்ணாமலை பல்கலை. பி.லிட் பட்டமும் தகுதியானது தான்.


இவை இரண்டையும் கடந்து பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70, 80% பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்;


அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.


எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித்துறை வழங்க வேண்டும், அதன்மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459