காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்: நாளை வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/09/2024

காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்: நாளை வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்

 


 

1309805

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.


தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னைகே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.


அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 6,630 எம்பிபிஎஸ் இடங்கள், 1,683 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்கள், 126 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவைதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,719 எம்பிபிஎஸ் இடங்கள், 430 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது.


அரசு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 28,819 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசையில் இடம்பெற்றுள்ள 13,417 பேரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சேர்க்கை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வு முடிவில்அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 399 எம்பிபிஎஸ் இடங்கள், 727 பிடிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 23 பிடிஎஸ் இடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவில்2 எம்பிபிஎஸ் இடங்கள் ஆகும். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,024எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 839 பிடிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன.


இதையடுத்து, இந்த காலி இடங்களை நிரப்புதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். 14-ம் தேதி பகல் 12 மணி முதல் 16-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும். வரும் 17-ம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இடஒதுக்கீடு விவரங்கள் 19-ம்தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். 19-ம் தேதி முதல் 26-ம் தேதி பகல் 12 மணி வரை இடஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459