பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பள்ளிக்கல்வித் துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக டிட்டோஜேக் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் டிட்டோஜேக் மாநில நிர்வாகிகள் அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், டி.ஆர்.ஜான் வெஸ்லி, இலா.தியோடர் ராபின்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் விவரம் வருமாறு;- கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 3 முதல் 9-ம் தேதிவரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் மற்றும் போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு முன்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் செயலரை செப்டம்பர் முதல் வாரத்தில் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வழங்க வலியுறுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment