பி.எட். 2-ம் ஆண்டு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில் வியாழக்கிழமை காலை ஆன்லைனில் புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டு புதிய பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகளை இப்பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பி.எட்., எம்.எட்., (பொது மற்றும் சிறப்புக் கல்வி) படிப்புகளில் முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 3-ம் நாளான வியாழக்கிழமை பி.எட்., 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு, ‘கிரியேட்டிங் அன் இன்க்ளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்துக்கான (செமஸ்டர் முறை) தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுவதாக இருந்தது.
இந்தச் சூழ்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது. வினாத்தாள் வெளியான விவரம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலை நடைபெற இருந்த தேர்வுக்கு உடனடியாக புதிய வினாத்தாள் ஆன்லைன் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.
பி.எட்., வினாத்தாள் முன்கூட்டிய வெளியான நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றி வந்த என்.ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துறையின் தலைவரான பேரராசிரியர் கே.ராஜசேகரன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு புதன்கிழமை ( ஆக. 28) பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவில் ஏற்கெனவே பதிவாளராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 23-ம் தேதியே அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment