முதுநிலை மருத்துவ படிப்புகளில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை நிறுத்தி வைத்தது தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




02/08/2024

முதுநிலை மருத்துவ படிப்புகளில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

 


1288250

 முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து 15 படிப்புகளை நீக்குவதற்கான அரசாணையை நிறுத்தி வைத்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 25 முதல் 30 துறைகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் (எம்டி, எம்எஸ்) உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மற்றும் தனியர் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 50 சதவீத இடங்களில் 50 சதவீதம் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அரசு மருத்துவர்கள் விரும்பிய துறையில் எம்டி, எம்எஸ் படிப்பை தேர்வு செய்து படித்து வருகின்றனர்.


இந்நிலையில், சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணை 151-ல், ‘முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இனிமேல், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுநிலை படிப்புகள் மட்டும் தான் இடம்பெறும். அதில், ஒன்றை தான் அரசு மருத்துவர்கள் தேர்வு செய்து படிக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.


.


அரசாணையின்படி, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து காது, மூக்கு தொண்டை (இஎன்டி), தோல், கண், மனநலம், சர்க்கரை, அவசர மருத்துவம் மற்றும் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் இரண்டு ஆண்டுகள் படிக்கும் அனாடமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பேத்தாலஜி உள்ளிட்ட சுமார் 15 துறைகளின் படிப்புகள் நீக்கப்பட்டது. இந்த படிப்புகளை இனிமேல் அரசு மருத்துவர்கள் படிக்க வேண்டும் என்றால் பொது கலந்தாய்வில் பங்கேற்று தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு மருத்துவர்கள், அரசாணை 151-ஐ ரத்து செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


Play Video

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு படிப்புகள் தொடர்பான அரசாணை 151-ஐ அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவர்கள் சங்கங்களும், மருத்துவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459