Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை! - செல்வ.ரஞ்சித் குமார் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/07/2024

Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை! - செல்வ.ரஞ்சித் குமார்

 Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


"வரி விதிப்பை எளிமைப்படுத்துவதே எங்களது முயற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் Corporate  மற்றும் தனிநபர் வருமான வரிக்கு exemptions & deductions இல்லாமல் எளிமைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது உட்பட  பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது வரி செலுத்துவோரால் பாராட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரியில் 58% 2022-23 நிதியாண்டில் எளிமைப்படுத்தப்பட்ட வரி விதிப்பிலிருந்து வந்தது. இதேபோல் இதுவரை கிடைத்த தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் New Regime முறையைப் பயன்படுத்தியுள்ளனர்." இது இந்திய நிதியமைச்சரின் 2024-25க்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான உரையின் சாரம்.


அதென்ன வரி விதிப்பை எளிமைப்படுத்தல்? மெய்யாகவே அதைப் பாராட்டுமளவிற்கு வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனரா? வருமான வரியில் 2024-25ன் மாற்றங்கள் என்னென்ன?


நாட்டிற்காக மற்ற எவரையும்விட, வருமான வரியாக மட்டுமே தனது ஒரு மாத ஊதியத்தை ஆண்டுதோறும் செலுத்திவரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் பார்ப்போம்.


தனிநபர் வருமான வரிக்கென முதலில் ஒரேயொரு வரிவிதிப்பு (Old Regime) முறையே இருந்தது. ஆனால், வரி விதிப்பை எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் New Regime முறை கொண்டுவரப்பட்டது.


இதன்படி,


1. வீட்டுக்கடனிற்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.


2. தொழில் வரிக்கு வரி விலக்கு இல்லை.


3. மழைவாழிடம் & குளிர்ப் பிரதேச படிகள் உட்பட வேலையின் தன்மைக்காக வழங்கப்படும் அனைத்துவித படிகளுக்கும் வரி விலக்கு இல்லை.


4. ஆயுள் காப்பீடு, சேமிப்புகள், முதலீடுகள், ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் என எதற்குமே வரி விலக்கு இல்லை.


5. மாற்றுத்திறனாளிகளுக்கோ, மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பதற்கோ வரி விலக்கு இல்லை.


6. மருத்துவக் காப்பீடுகளுக்கோ, மூத்த குடிமக்களின் மருத்துவச் சிகிச்சைச் செலவினங்களுக்கோ வரி விலக்கு இல்லை.


7. பிள்ளைகளின் கல்விக் கட்டணத்திற்கோ, கல்விக் கடனுக்கான வட்டித் தொகைக்கோ வரி விலக்கு இல்லை.


8. அரசுக்கோ, அறிவியல் நிறுவனங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ & அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கோ அளிக்கும் நிதியளிப்புகளுக்கு (Donation) வரி விலக்கு இல்லை.


9. மின்சார வாகனக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.


மொத்தத்தில் ஒருவர் தான் பெறும் ஊதியத்திற்கு 100% வருமானவரி செலுத்தியாக வேண்டும். அவர் வீடுகட்டுவதைப் பற்றியோ, பிள்ளைகளைப் படிக்க வைப்பது பற்றியோ, உயிருக்குக் காப்பீடு செய்வது பற்றியோ, மூத்தோர் & மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பது பற்றியோ, இயற்கைப் பேரிடரின் போது அரசுக்கு நிதியுதவி செய்வது பற்றியோ எந்தவித அக்கறையும் பொறுப்புணர்வும் அரசிற்கு இல்லை என்கிறது இந்த New Regime.


அடிப்படையில் மேலே கூறப்பட்ட வரி விலக்குப் பிரிவுகள் அனைத்துமே 100% தனிமனித சேமிப்பையும், பாதுகாப்பையும், கல்வியையும், அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அவற்றின் தேவை கருதியே கொண்டுவரப்பட்டன. மேலும், இதனால் வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காகவே தனிநபர் சேமிப்பும், LIC காப்பீடுகளும், வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுவதுமான நாட்டின் வளர்ச்சிக்கான மறைமுக முதலீடுகள் கோடிகோடியாகப் பெருகியது. இறுதியாக வந்த உலகப் பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா மட்டும் பேரிழப்பைச் சந்திக்காது இருந்ததற்கு இந்தியர்களின் தனிமனத சேமிப்புகளே காரணம் என்கிறது உலக பொருளாதார நிலை ஆய்வறிக்கை.


ஆனால், வரி விதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் NEW REGIME மூலம் தனிநபருக்கும், அவரது குடும்ப நல்வாழ்விற்கும், LIC உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அதன் மூலமாக நாட்டிற்கும் 100% பாதிப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம். இனி வரும் காலங்களில் தனிநபர் சேமிப்பு, LIC உள்ளிட்ட ஆயுள் காப்பீடு உட்பட முன்னர் வரிவிலக்கு பெற்ற அனைத்தின் மீதான ஈர்ப்பும் மாத ஊதியம் பெருவோரிடையே முழுமையாகக் குறைந்துவிடும். இதன் தாக்கம் 100% நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்.


அப்படியெல்லாம் இல்லை NEW REGIMEல் தான் எனக்கு வரி குறைவாக வருகிறது என்று நினைப்போர் ஒன்றை மட்டும் நினைவில் ஏற்றிக்கொள்ளுங்கள், NEW REGIMEல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரிவிதிப்பில் சிறிசிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; ஆனால் OLD REGIMEல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வரிவிதிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இல்லை. நல்லா ஓடுற Bikeஐ OFF பண்ணீட்டு பார்த்தா Bicycle வேகமா ஓடுறமாதிதான் தெரியும்.


மொத்தத்தில் வரிவிதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் வரி செலுத்துவோரும் - மற்றவர்களும் - ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. இங்கு நான் குறிப்பிட்டுள்ள பாதிப்புகள் குறைவானவையே. முழுமையான  இதன் விபரீத விளைவுகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம் கண்களால் காண்போம். இனி இப்பதிவில் 2024-25 Budgetன் Income Tax மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.


வருமான வரி தொடர்பாக New Regime முறைக்கு மட்டும் வரி சதவீதம் மற்றும் Standard Deductionல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி,


நிகர வருமானம் ரூ.3,00,000 வரை வரி இல்லை.

3,00,001 - 7,00,000     -   5%

7,00,001 - 10,00,000   - 10%

10,00,001 - 12,00,000 - 15%

12,00,001 - 15,00,000 - 20%

15,00,000க்கு மேல்    - 30%

என்று வரி விதிக்கப்படும். அதாவது 6,00,001 - 10,00,000 வரையிலான 4,00,000 ரூபாய்க்கான வரியானது கடந்த ஆண்டைவிட 5% குறைக்கப்பட்டுள்ளது.


அடுத்ததாக, Standard Deduction 25,000 அதிகரித்து 75,000ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால், 7,50,000-க்குப் பதில் வரும் ஆண்டில் ரூ.7,75,000 வரை ஆண்டு மொத்த வருமானம் (Gross Income) உள்ளோருக்கு வருமானவரி இல்லை. அதாவது,


Gross Income.          = 7,75,000 -

Standard Deduction=    75,000

                                        --------

Net Taxable Income= 7,00,000

                                        --------

என்று கழிவிற்குப் பிந்தைய நிகர வருமானம் ரூ.7,00,000 வரை வந்தால் வரி இல்லை. 


ஆனால் இதை Nil Tax என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக ரூ.7,00,000 வரையிலான நிகரத் தொகைக்கு U/S 87Aல் special Rebate அளித்து வரி சுழியமாக்கப்படும். இது வழக்கமான நடைமுறையே.


அதாவது, ரூ.7,00,000க்கான தற்போதைய வரி,


Upto 3,00,000           = 0

3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%

                                      = ரூ.20,000


இந்த ரூ.20,000 Rebateஆக அனுமதிக்கப்பட்டு கழிக்கப்பட, வரி சுழியமாகும். இது நிகர வருமானம் ரூ.7,00,000/- வரை இருந்தால் மட்டுமே பொருந்தும்.


அதைவிடக் கூடுதலானால் முதல் 3 இலட்சத்தைத் தவிர்த்து மற்ற தொகை முழுமைக்கும் வரி விதிப்பு % படி வரி கட்டியாக வேண்டும். உதாரணமாக, ரூ.7,00,010க்கான வரி,


Upto 3,00,000           = 0

3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%

7,00,001 - 7,00,010 = 10 × 10%

                                      = 0 + 20,000 +1

                                      = ரூ.20,001


என்னடா இது டேக்ஸ் மார்ஜினைவிட 10 ரூவா வருமானம் கூடுனதுக்கு 20,000 வரியா? என்று ஷாக் ஆகாதீங்க.


இது தான் வழக்கமான கணக்கீடு என்றாலும், இந்த அதிர்ச்சியைக் குறைக்க Marginal Relief என்ற முறை கடந்த ஆண்டு முதலே New Regimeல் மட்டும் நடைமுறையில் உள்ளது. U/S 87Aல் இந்த Marginal Relief  கணக்கீடு மேற்கொள்ளப்படும். நிகர வருமானத்தைப் பொறுத்து ரூ.19,991 முதல் ரூ.2 வரை Rebate அளித்து வரி கழித்துக் கணக்கிடப்படும்.


இதனால், நடப்பு ஆண்டிற்கு 7,00,000 முதல் 7,22,220 வரையிலான நிகர வருமானத்திற்கு ரூ.7 இலட்சத்தைவிடக் கூடுதலாக வரும் வருமானத்தை மட்டும் வரியாகச் செலுத்தினால் போதுமானது. ஆதாவது, 7,00,010க்கு வரி = ரூ.10 என்று தொடங்கி 7,22,220க்கு வரி = ரூ.22,220 என்பது வரை வருமான வரியாக வரும். 


7,22,220க்கும் மேலான நிகர வருமானத்திற்கு Marginal Relief தேவைப்படாது. ஏனென்றால் அதற்கு மேல். . . . . ஷாக் ஆக்காத வழக்கமான வரிக் கணக்கீட்டுத் தொகையே வந்துவிடும். 


இவ்வளவுதான் தனிநபர் வருமான வரி தொடர்பான நடப்பு ஆண்டின் தற்போதைய மாற்றங்கள். அடுத்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு அளிக்கப்படும் மதிப்பையும் பொறுத்து மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.


இறுதியாக, இந்த 5% வரிக் குறைப்பு, Standard Deduction 75,000 மற்றும் Marginal Relief என்பதையெல்லாம் பார்த்து NEW REGIME தான் Best Tax Method என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை நம் மனதுள் வளர்த்து இதுதான் எளிமையானது என்று நம்மை நம்ப வைக்கவே மேற்கண்ட மாற்றம் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளனர்.


இதன் முக்கிய நோக்கமே, நாமும் நாடும் பயன்படும் OLD REGIMEஐ முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே. 5 ஆண்டுகளுக்கும் மேலாக OLD REGIMEன் வரிவிதிப்பில் பெரிய அளவிலான எந்தவித மாற்றமும் செய்யாது, அதை நாமே தவிர்க்கும்படியான சூழலை திட்டமிட்டே உருவாக்கியுள்ளனர்.


இனி இதில் மாற்றம் நிகழுமா என்பது தெரியாது. எனினும், "வரியை எளிமைப்படுத்தினோம்!" எனும் பேரில் நாமும் நாடும் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதைத் தெளிவிக்கவே இப்பதிவு. பெருமொத்தத் தெளிவால் எதிர்காலத்தில் மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


--- --- ---- ----

பின்குறிப்பு :

எனது பெயரை வேண்டுமானாலும் அழித்துவிட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள். பதிவின் நோக்கம் மக்களைச் சென்றடையட்டும்.


பதிவின் நோக்கத்திற்கு மாறாக / Taxஐ பற்றி மட்டுந்தான் பதிவிடுவோம் என்பதாக இடையில் வெட்டி ஒட்டி எனது உழைப்பைத் திருடி இப்பதிவின் நோக்கத்தையே சிதைத்துவிட வேண்டாம். நன்றி.

--- --- ---- ----

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459