பணிநிரவல், மாற்றுப்பணி உத்தரவுகளுக்கு எதிர்ப்பு; அரசு உதவிபெறும் பள்ளிகள் போராட்டம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/07/2024

பணிநிரவல், மாற்றுப்பணி உத்தரவுகளுக்கு எதிர்ப்பு; அரசு உதவிபெறும் பள்ளிகள் போராட்டம் அறிவிப்பு

 தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணிநிரவல், மாற்றுப்பணி உத்தரவுகள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட்டில் மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும்' என தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


மதுரையில் கூட்டமைப்பு மாநில செயல் தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் அமலராஜ் ஆகியோர் கூறியதாவது:


தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் உதவிபெறும் பள்ளிகளில் பணிநிரவல், மாற்றுப் பணிகள் வழங்கி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மாற்றுப்பணி வழங்கிய பள்ளிகளுக்கு அரசு ஆசிரியர்களுக்கும் மாறுதல் உத்தரவு வழங்கி கல்வித்துறை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிநிரவல், மாற்றுப்பணி நடவடிக்கை திரும்ப பெற வேண்டும். புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்கள் கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நடைமுறைப்படுத்தியதை வரவேற்கிறோம். அதேநேரம் உயர்கல்வி இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.


பல ஆண்டுகளாக அரசு அனுமதித்த காலி பணியிடங்களில் விதிகளுக்குட்பட்டு மேற்கொண்ட புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் சம்பளமின்றி பணியாற்றுகின்றனர். அவ்வகை ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உடன் சம்பளம் வழங்க வேண்டும்.


கல்வி அலுவலகங்களில் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணப் பலன் சார்ந்த கோரிக்கைகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்கு தீர்வுகாண வேண்டும். தீயணைப்பு தடையின்மை சான்று, சுகாதார சான்று உள்ளிட்ட பள்ளி அங்கீகார சான்றுகளை ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு பதில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றம் செய்திட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் குறித்து சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகள் உரிமைக் குழு, தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகத்துடன் விவாதித்து ஆகஸ்ட்டில் மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

IMG-20240720-WA0006

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459