ஆசிரியர்கள் கைது - சீமான் கண்டனம் - ஆசிரியர் மலர்

Latest

 




29/07/2024

ஆசிரியர்கள் கைது - சீமான் கண்டனம்

 


Tamil_News_lrg_3688645

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் துவக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதைக் கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடலா?

கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459