தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் துவக்கி வைத்து பேசுகையில்;
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்கு பணி செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வாக உள்ளது. பசியை போக்குவதற்காக பெற்றோர்களுக்கு உரிய பாசத்தோடு நான் கொண்டு வந்த திட்டம் தான் காலை உணவு வழங்கும் திட்டம்.
பள்ளி குழந்தைகள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது.
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. மாணவர்கள் படிப்புக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். படிப்பதற்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பதுதான் அரசின் கடமை. குழந்தைகள் எதிர்காலத்தின் சொத்து. காலைஉணவு திட்டம் என்பது முதலீடு. பசி பிணி போக்கும் இத்திட்டம் கடல் தாண்டி கனடாவிலும் செயல்படுத்தப்படுகிறது.
தடைகளை உடைப்போம்
20.73 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் 2,23,536 குழந்தைகள் பயன்பெறுவர். இந்த காலை உணவு தரமாக வழங்கப்படும். ஒரு துளி கூட தரம் குறையாமல் வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். இதனை உறுதி செய்ய அமைச்சர்கள், அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? அத்தகைய ஆக்கபூர்வமான செயலை மத்திய அரசு செய்யுமா?. மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ!. தமிழக மாணவர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும், அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறுதுணையாக இருப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மனநிறைவு தந்தது!
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழகம் முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை கண்காணித்தேன். மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்!. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment