அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டம்: உயர் கல்வித் துறை தீவிரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/07/2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டம்: உயர் கல்வித் துறை தீவிரம்

 


 

1277380

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் பணிகள் நடப்பு கல்வியாண்டுக்குள் முடிக்கப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் ஆண்டுக்கு 75 சதவீதம் பேர் தற்போது வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதன்படி, 2022-23-ம் ஆண்டு படிப்பை முடித்த 62,410 மாணவர்களில் 54,888 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தொடர்ந்து தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப பாலிடெக்னிக் கல்லூரிகளை தரம் உயர்த்துவதற்கான பணிகள் உயர்கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதன்படி பாலிடெக்னிக் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2023-24-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் அறிவிப்பில், ‘தொழிற் துறையினருடன் இணைந்து 4.0 தரத்துக்கு ஏற்ப 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ரூ.2,783 கோடியில் திறன்மிகு மையங்களாக மாற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்கள் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக முன்வைக்கப்பட்டது.


.


அந்த வகையில், டாடா போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) பங்களிப்பு வாயிலாக ரூ.2,360 கோடியில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கல்வியாண்டிலேயே அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தின்கீழ் ரோபோட்டிக்ஸ், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பு, ஆட்டோமொபைல், மின்சார வாகனம், உற்பத்தி திறனாய்வு, இணையதள தொழில்நுட்பம் உட்பட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459