உதவிபெறும் பள்ளிகளில் தேவையற்ற பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி ஆணைகளுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 18) திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் எஸ். ஜேசையா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் ஜெ. கண்ணன் தலைமை உரையாற்றினார். மாநில கௌரவத் தலைவர் புலவர் மா. கணபதி துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் அ. அமரராஜன் அறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். இந்து பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ். பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார். மாநில செயல் தலைவர் கனகராஜ் நிறைவு செய்து பேசினார். மாநிலப் பொருளாளர் தயாளன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும், பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி ஆணைகளை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், ஆசிரியர்களுக்கும், ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட உடனடி நடவடிக்கை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விரைவாக நிறைவேற்றிடத் தமிழக அரசையும் கல்வித்துறையையும் வலியுறுத்திட அமைச்சர், கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களை ஜூலை 25-ல் சென்னையில் நேரில் சந்தித்து முறையீடு செய்யவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுவினைக் கூட்டி விவாதித்து தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்விக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி நிர்வாகங்களுடன் கலந்து பேசி வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாநிலம் தழுவிய அளவில் முதல் கட்டமாக ஐந்து மண்டலங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தவும், கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில் சென்னையில் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment