புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பேரூராட்சி 1வது வார்டு காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதனின் சொந்த ஊரான ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஒரு மாதம் முன்பும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 6 ந் தேதி நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கூண்டோடு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதால் கடந்த ஒரு மாதமாக ஆசிரியர்களே இல்லாமல் சில மாற்றுப் பணி ஆசிரியர்கள், சில தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் நடந்து வருகிறது.
இது குறித்து கடந்த 6 ந் தேதியே நக்கீரன் இணையத்தில் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை கல்வித்துறை செயலாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி இப்படி அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு செல்ல என்ன காரணம் என்பதை அறிக்கை பெற்று அனுப்புமாறு கேட்டிருந்தார். சில நாட்களில் அந்த அறிக்கையும் அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பிறகு அடுத்தடுத்த ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவில் வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள் பணிமாறுதலில் வரும் போது இந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனால் தற்போது வரை இந்தப் பள்ளிகளுக்கு எந்த ஆசிரியரும் வரவில்லை. இந்த செய்தி பற்றி அறிந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல நிழ்ச்சிகளில் பங்கேற்றவர் கடைசியாக பேராவூரணியில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடி வடக்கு மற்றும் காசிம்புதுப்பேட்டை பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரிடம் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்
பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் உள்ள ஆயிங்குடி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திடீரென தனியாகச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நேராக வகுப்பறைகளுக்குள் சென்று மாணவர்களை படிக்கச் சொல்லியும், எழுதச் சொல்லியும் பார்த்துவிட்டு கட்டங்களை ஆய்வு செய்த பிறகு அங்கிருந்த ஆசிரியர்களிடம் சில விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு பணியிட மாறுதல் பெற்று இன்னும் புதிய பள்ளிக்குச் செல்லாமல் மாற்றுப்பணியில் உள்ள ஒரு ஆசிரியை, மேலும் ஒரு மாற்றுப் பணி ஆசிரியர், இடைநிலை மற்றும் மழலையர் வகுப்புகளுக்கான தலா ஒரு ஆசிரியைகள், கணினி இயக்குநர் என 5 பேர் பணியில் இருந்தனர்.
அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு அறந்தாங்கி புறப்பட்டார்.
மாலை நேரமானதால் காசிம்புதுப்பேட்டை செல்வதற்குள் பள்ளி விடப்பட்டுவிடும் அதனால் மற்றொரு நாளில் ஆய்வு செய்வோம். அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு பள்ளிக்குச் செல்லலாம் என்று கூற அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
கூடவே கல்வித்துறை அதிகாரிகளும் சென்ற போது அங்கே பல வகுப்பறைகளிலும் பெஞ்ச், டெஸ்க் இல்லாமல் மாணவிகள் தரையில் அமர்ந்திருப்பதைப் பார்ந்து அமைச்சரின் முகம் மாறியது, அடுத்தடுத்து மேலும் சில வகுப்பறைகளும் அப்படியே காணப்பட்டது. மேலும் சில வகுப்பறைகளில் சாக்பீஸ், டஸ்டர் வைக்க பயன்படுத்தும் ஒரே டெஸ்க்கும் துருபிடித்து காணப்பட்டது.
அதில் சாய்ந்தால் துரு உடைகளில் ஒட்டிக் கொள்ளுமோ என்று எச்சரிக்கையாகவே தள்ளியே நின்ற அமைச்சர் தலைக்கு மேலே மின்விசிறியே இல்லாத மின்விசிறி பொருத்தும் குழாய் மற்றும் கப் பெருமாள் கோயில் ஆசிர்வாதத்திற்கு பயன்படுத்தும் மணி போல தொங்கிக் கொண்டிருந்தது.
ஜன்னல் இரும்பு கதவுகளுக்கு எப்போதோ பெயிண்ட் அடித்து துருபிடித்து காணப்பட்டது. ஒரு பெரு நகரத்தில் இப்படி ஒரு பள்ளியா என்று அதிகாரிகளையும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தவர் எதையுமே சொல்லாமல் இருண்ட முகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
அமைச்சரின் திடீர் ஆய்வால் திடுக்கிட்ட பள்ளி நிரவாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியைப் பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் சென்றிருப்பது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன ஓலை வரப் போகிறது என்று. அமைச்சரின் திடீர் ஆய்வு பற்றி அறிந்த பெற்றோர்கள் அமைச்சரின் சரியான நடவடிக்கை இது.
முன்பே தகவல் சொல்லி இருந்தால் பள்ளியை அலங்கரித்து வைத்திருப்பார்கள் ஆனால் சொல்லாமல் வந்ததால் உண்மை நிலையை காணமுடிந்தது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு அமைச்சர் திடீர் ஆய்வுகள் செய்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.
No comments:
Post a Comment