'கல்வித்துறையில் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் காலியாக உள்ள 350 முதுநிலை பட்டதாரி (பி.ஜி.,) ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மறைமுக பேரம் துவங்கியுள்ளது. இதனால் காலிப்பணியிடங்களை மறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்' என ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு 9:00 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதனால் மதுரையில் பரவை, மேலுார் (ஆண்கள்), மேலுார் (பெண்கள்), உசிலம்பட்டி, பேரையூர் ஆண்கள், டி.வாடிப்பட்டி, அலங்காநல்லுார் (ஆண்கள்) மேல்நிலை பள்ளிகள் என மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட பி.ஜி., ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின. இப்பணியிடங்களை நிரப்ப ஜூலை 26 ல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த காலியிடங்களுக்கு அரசியல் சிபாரிசால் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் நேரடியாக பணிமாறுதல் பெற பலர் முயற்சிக்கின்றனர். இப்பிரச்னை கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜூலை 27 ல் நடக்கவுள்ள கலந்தாய்வை நாளை (ஜூலை 23) நடத்த கல்வித்துறை ஆலோசிக்கிறது.
பணியிடங்களை மறைக்க திட்டம்
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஆசிரியர்கள் நலன் கருதி பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஒருபுறம் நடந்து வந்தாலும், அரசியல் பின்னணியில் 'நிர்வாக காரணம்' என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட பணியிட மாற்ற உத்தரவுகளும் மறைமுகமாக பிறப்பிக்கப்படுகின்றன. இதற்காக முன்கூட்டியே கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட காலிப் பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன. இடங்கள் மறைப்பு கண்டித்து பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தீர்வு இல்லை. குறிப்பாக இந்தாண்டு மே 31ல் ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்புகள் காரணமாக காலியான 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பெரும்பாலும் கலந்தாய்வில் காண்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் பி.ஜி., ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும் சம்பந்தப்பட்ட பி.ஜி., ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவு முதலே 'நிர்வாக
காரணம் என்ற பெயரில் டிரான்ஸ்பர் பெற்று தருகிறோம்' என கூறி ரூ. பல லட்சங்கள் பேரம் துவங்கியுள்ளது, இத்துறையில் தற்போது பேசும்பொருளாக உள்ளது. இதற்கு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்களே இடைத்தரகர்களாக மாறியுள்ளனர். இதனால் கலந்தாய்வை நம்பியுள்ள தகுதியான ஆசிரியர்கள் ஏமாற்ற மனநிலையில் உள்ளனர் என்றனர்.
அரசு நோக்கத்திற்கு முரணானது
இந்நிலையில் கல்வித்துறை இயக்குநர், செயலருக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
பணிமாறுதல் வாய்ப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்க விதிகள், நெறிமுறைகள் வகுத்து, ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. ஆனால் சில நாட்களாக இதற்கு மாறாக வெளிப்படைத் தன்மையின்றி நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மறைமுகமாக நடக்கும் பணியிடமாற்றங்கள் அரசின் நோக்கத்திற்கு முரணானதாக அமைகிறது. மாறுதல் பெற காத்திருப்பவரின் முன்னுரிமையை தட்டிப்பறிக்கப்படுகிறது
மாவட்டம் வாரியாக அனைத்து பி.ஜி., ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் கலந்தாய்வில் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். நிர்வாக மாறுதல் நடக்காது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார்
No comments:
Post a Comment