தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகியும் சீருடை, காலணிகள் வழங்கப்படவில்லை: தாமதம் ஏன்? - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/07/2024

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகியும் சீருடை, காலணிகள் வழங்கப்படவில்லை: தாமதம் ஏன்?

 

 

1284571

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை சீருடைகள், காலணி போன்ற நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச் சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் க்ரையான்கள், மிதிவண்டி, கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். எஞ்சிய சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இதர பொருட்கள் படிப்படியாக ஜூலை 2-வது வாரத்துக்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், நடப்பு கல்வியாண்டில் (2024-25) பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகிவிட்ட சூழலில், இதுவரை சீருடைகள், காலணி போன்ற பொருட்கள் வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் சீருடை மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியது: “தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 41.16 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 செட் சீருடைகள் வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2 வாரத்துக்குள் மாணவர்களுக்கு தலா 2 செட் சீருடை தரப்படும். தொடர்ந்து புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி போன்ற இதர பொருட்கள் படிப்படியாக விநியோகம் செய்யப்படும்.


ஆனால், இந்தாண்டு பாடநூல்கள், நோட்டுகள், க்ரையான்கள் மட்டுமே இதுவரை அளிக்கப்பட்டுள்ளன. மற்ற பொருட்களின் நிலை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அரசின் இலவச பொருட்களின் தரம் ஓராண்டுக்கு மேல் நீடிக்காது. இதனால் மாணவர்கள் சொந்த செலவில் சீருடைகள், புத்தகப் பை, காலணிகள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நலத்திட்டப் பொருட்களை தமிழக அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டன. முதல் நாளே 70 லட்சத்து 67 ஆயிரத்து 94 மாணவர்களுக்கு பாடநூல்களும், 60 லட்சத்து 75 ஆயிரத்து 315 பேருக்கு நோட்டுப் புத்தகங்களும், 8 லட்சத்து 22 ஆயிரத்து 603 பேருக்கு புவியியல் வரைபடம், க்ரையான்களும் வழங்கப்பட்டுள்ளன.


இலவச மிதிவண்டி விநியோகம் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுவிட்டது. சீருடைகள், காலணி விவகாரத்தில் மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து அதற்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடப்பாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் சீருடை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து மாணவர்களுக்கு ஜூலை 29-ம் தேதி முதல் பள்ளிகளிலேயே விநியோகம் செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.


மேலும், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பணிகளை திட்டமிட்டபடி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி, வண்ண பென்சில்கள் உட்பட இதர இலவச பொருட்களும் படிப்படியாக ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வழங்கப்படும்,” என்றனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459