அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு: அன்புமணி - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/07/2024

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு: அன்புமணி

 

 

1275387

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது 1500 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதமும், அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஓர் ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.


மாணவர்கள் வளரும் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்கல்வி மிகவும் அவசியம் ஆகும். ஒரு பள்ளியில் 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றால், அவர் 4 அல்லது 5 வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து தான் உடற்கல்வி வகுப்பை நடத்த முடியும். ஒரே நேரத்தில் 150 முதல் 200 மாணவர்களை வைத்துக் கொண்டு யாருக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தர முடியாது.


மாணவர்களைச் சுற்றிலும் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மாணவர்களைக் காக்க வேண்டுமானால், அவர்களை விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தராவிட்டால் மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.


தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார்.


ஆனால், அவரது நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழஙகப்படும் மரியாதையா?


பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பை வலுப்படுத்தியும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459