பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/07/2024

பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

 

 

1287017

நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.


அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட உள்ளன.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று செப். 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். மேலும், கூடுதல் விவரங்களை வலைத் தளத்தில் அறியலாம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459