கள்ளக்குறிச்சி: அரசு பள்ளியில் ஆய்வு செய்ய வந்தபோது 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளியில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளியில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; ''கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் 11.07.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட நேரடிப் பள்ளிப் பார்வையின் போது நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.
விசாரணை மேற்கொண்டதில், பட்டதாரி ஆசிரியர்கள் சி.பெரியசாமி மற்றும் திருபா பொன்முடி ஆகிய இருவரும் பணிமாறுதல் பெற்று புதிய பணியிடத்தில் சேருவதற்கு உடன் சென்றது தெரிய வருகிறது. மேலும், மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் வெளியில் திரிந்து ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டனர். பள்ளியின் மீதும் மாணவர்களின் மீதும் அக்கரை இல்லாமல் செயல்பட்டதற்கும், மேலும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் நாகலூர், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொ.வெங்கடேசன் என்பவர் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
1) 11.07.2024 தேதி உயர் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்காமல் மாறுதல் பெற்ற ஆசிரியர்களைப் புதிய பணியிடத்தில் பணியேற்க செய்யும் பொருட்டு உடன் சென்றது.
2) 15 க்கும் மேற்பட்ட (50%) ஆசிரியர்களுக்கு விடுப்பு அளித்து பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணியேற்கும் பொருட்டு உடன் அழைத்து சென்று பள்ளி சுமூகமாக நடைபெறுவதற்கு குந்தகம் விளைவித்தது.
3) தாங்கள் பொறுப்பில்லாமல் செயல்பட்டதால் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு கற்றல் கற்பித்தல் பணி நடைபெறாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
4) அனைத்து மாணவர்களும் பள்ளியில் உள்ளபோது மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டது.
5) அரசு பணியின் மீது பற்று இல்லாமல் செயல்பட்டது.
6). தன் பொறுப்புகளையும் கடமைகளையும் மறந்து பள்ளிப்பணிக்கு குந்தகம் விளைவித்தது.
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் நாகலூர், அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொ.வெங்கடேசன் என்பவர் 11.07.2024 பிற்பகல் முதல் தற்காலிகமாக பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
மேலும், புதிய பணியிடத்தை சென்னை-06, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது'' இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment