'நீட் தேர்வு நேர்மை யாக நடந்துள்ளது; வினாத்தாள் கசியவில்லை. விதிகளின்படியே கருணை மதிப் பெண் வழங்கப்பட்டு உள்ளது. தேர்வர்களின் ஆட்சேபனைக்கு ஏற்ப, விடைக்குறிப்பும் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது' என, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., மூத்த இயக்குனர் சாதனா பராஷர் வெளியிட்டுள்ள விளக்கம்:
நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் 'நீட்' தேர்வு நடத்தப்பட்டதில், 23 லட்சத்து 33,297 பேர் பங்கேற்றனர்.
சில மையங்களின் தேர்வறைகளில், தேர்வர்களுக்கு விடை எழுத நிர்ணயிக்கப்பட்டிருந்த நேரம் கிடைக்கவில்லை என, பஞ்சாப், ஹரியானா, டில்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
கோரிக்கை
இது தொடர்பாக, சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கைகளும் வந்தன. இதையடுத்து, தேர்வு சார் நிபுணர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து, தேர்வறையின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, உண்மை நிலவரம் அறியப்பட்டது.
அதன்பின், சம்பந்தப்பட்ட தேர்வர்கள் இழந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியும் என்பதை கணித்து, அதற் காக உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.
இதில் சிலர், 720 என்ற முழு மதிப்பெண்ணை எட்டினர். இரண்டு தேர்வர்கள் கருணை மதிப்பெண்ணால், 718 மற்றும் 719 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
என்.டி.ஏ., வெளியிட்ட விடைக் குறிப்பில், 13,373 பேர் ஆட்சேபனை விண்ணப்பம் அளித்தனர். அவர்களது ஆட்சேபனைகள், துறை சார் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், என்.சி.இ.ஆர்.டி., பழைய புத்தக விடையா, புதிய புத்தக விடையா என்ற குழப்பத்துக்கு, இரண்டு விடைகளுக்கும் மதிப்பெண் வழங்க முடிவானது. 720 மதிப்பெண் பெற்ற 67 பேரில், 44 பேர் இந்த திருத்தப்பட்ட விடைக்குறிப்பால், முழு மதிப்பெண் பெற்றனர்; ஆறு பேர் கருணை மதிப்பெண்ணால் முழு மதிப்பெண் பெற்றனர்.
தேர்வு நடத்தி, 30 நாட்களில் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளோம். ஜே.இ.இ., முதல் கட்ட தேர்வில், 11 நாட்களிலும்; இரண்டாம் கட்ட தேர்வில், 15 நாட்களிலும் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வழக்குப்பதிவு
தேர்வை நடத்துவதற்கு வெளிப்படையான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு மையம், நகரம் உள்ளிட்ட விபரங்கள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. உத்தேச விடைக்குறிப்பு, இறுதி விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்வர்களுக்கான விடைத்தாள்களும், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண் விபரமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
தேர்வு தொடர்பான சரியான புள்ளி விபரங்களும் வெளியிடப்படுகின்றன. தேர்வில் முறைகேடாக நடந்தால், அவர்களின் தேர்வு ரத்தாகிறது.
எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது. ஆள் மாறாட்டம் செய்வோர் மீது, போலீசில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
எனவே, நீட் தேர்வு நியாயமாக நடத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் எந்த வகையிலும் கசியவில்லை.
தேர்வு நடத்துவதற்கான நேர்மைத் தன்மையில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment