பள்ளி பாட திட்டத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நீக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. "பள்ளி புத்தகத்தில் ஏன் கலவரம் பற்றிக் கற்பிக்க வேண்டும்? என இதற்கு விளக்கம் அளித்துள்ளார் NCERT இயக்குநர்.
பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி மேற்கொண்ட ராம ரத யாத்திரையும் பாபர் மசூதி இடிப்பும் இந்திய வரலாற்றில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. பள்ளி பாட திட்டத்தில் இருந்து இந்த இரண்டு நிகழ்வுகளும் சமீபத்தில் நீக்கப்பட்டன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30,000 பள்ளிகள் இயங்கி வருகின்றன. CBSE பள்ளிகளின் பாட திட்டங்களை NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலே தயாரித்து வருகிறது.
பாட பகுதியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் மசூதி இடிப்பு சம்பவம்: பள்ளி பாட திட்டத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு தொடர்பான பாட பகுதி நீக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ள நிலையில், NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "வெறுப்பு குறித்தும் வன்முறை குறித்தும் கற்பிப்பது கல்வி அல்ல. பள்ளி பாடப்புத்தகங்கள் அவற்றில் கவனம் செலுத்தக்கூடாது" என்றார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றிக் கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம். வன்முறைமிக்க மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல.
மனதை புண்படுத்தி, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்கும் வகையில் அல்லது வெறுப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என கருதும் நோக்கில் மாணவடர்களுக்கு கற்பிக்க வேண்டுமா? இதுதானா கல்வியின் நோக்கம்?
இதுபோன்று சிறு குழந்தைகளுக்கு, கலவரம் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? அவர்கள் வளரும்போது, அவர்கள் கற்றுக்கொள்ளலாம். பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் அதை கற்று கொடுக்க வேண்டும்? பள்ளி பாட திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று.
காவி மயமாகிறதா பள்ளி பாட திட்டங்கள்? ராமர் கோவில், பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால், அதை நமது பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாதா? அதில் என்ன பிரச்னை? புதிய தகவல்களை சேர்த்துள்ளோம்.
நாங்கள் புதிய நாடாளுமன்றத்தை கட்டியுள்ளோம் என்றால் அது பற்றி எமது மாணவர்கள் அறிய வேண்டாமா? பழங்காலத்தில் நாம் சந்தித்த முன்னேற்றங்கள். சமீபத்திய வளர்ச்சிகளை உள்ளடக்குவது நமது கடமையாகும்" என்றார்.
பள்ளி பாட திட்டங்கள், காவிமயமாவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த NCERT இயக்குநர், "புத்தகங்களில் ஏதாவது பொருத்தமற்றதாக மாறியிருந்தால், அதை மாற்ற வேண்டும். அதை ஏன் மாற்றக்கூடாது?
நான் இங்கு எந்த காவிமயமாக்கலையும் பார்க்கவில்லை. நாங்கள் வரலாற்றைக் கற்பிக்கிறோம். அதனால் மாணவர்கள் உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதை போர்க்களமாக மாற்றுவதற்காக அல்ல" என்றார்.
No comments:
Post a Comment