இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/06/2024

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித்திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வந்தது. 


கொரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களில் சிலர், ஸ்மார்ட் வகுப்புகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர்களாக அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இல்லம் தேடி கல்விதிட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாக வட்டார அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்து கண்காணித்து வந்தனர்.இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி கற்றல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் மீணடும் பள்ளி பணிக்கு திரும்பும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 


ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு என்று ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்களை நியமனம் செய்தனர். ஆனால் தற்போது இல்லம் தேடி கல்வி திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வி வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளராக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கும் திறமையான மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்த ஒரு நபரை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தப்படும். வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் வரும் ஜுலை 1ம் தேதி முதல் பள்ளி பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அவ்வாறு அனுப்பியுள்ள ஆசிரியர்களில் சில இடங்கள் உபரி பணியிடமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். அந்த ஆசிரியர்களை தற்போது நடைபெற உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளினுடைய உபரி ஆசிரியர்களாக இருப்பின் வரும் 27ம் 28ம் தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம் செய்திட வேண்டும். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களாக இருப்பின் அந்தப் பள்ளியில் உபரி பணியிடம் இல்லாமல் இருந்தால் அவர்களை தொடர்ந்து பணிபுரிய வேண்டும். உபரி பணியிடமாக இருந்தால் உடனடியாக மாணவர்களின் தேவை அடிப்படையில் ஒன்றியத்திற்குள் உள்ள அரசு பள்ளிக்கு உடனடியாக நியமனம் செய்கின்ற வகையில் அவர்களுக்கு உரிய கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும். இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் வழங்குகின்ற பட்டியல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதனை சரி பார்த்து உறுதி செய்து இப்பணிகளை எவ்வித சுணக்கும் இன்றி நன்முறையில் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459