தமிழ்ப்புதல்வன் திட்டம் | ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - முதல்வர் ஸ்டாலின் உறுதி - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/06/2024

தமிழ்ப்புதல்வன் திட்டம் | ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - முதல்வர் ஸ்டாலின் உறுதி

 


1264619

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மேலும், “நீட் போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழகம்தான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு” என்றும் அவர் கூறினார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 14) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், அரசுப் பள்ளிகளில் 455.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள், நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 67-வது தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களை பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார். தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளையும் வழங்கினார்.


இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தேர்வு முடிவுகள் வந்ததும், நானே நம்முடைய அமைச்சர் மகேஸுக்கு போன் செய்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், நான் கலந்துகொள்ளும் முதல் அரசு விழாவாக, இந்தப் பாராட்டு விழாதான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று சொல்லியிருந்தேன். அதன்படி விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு எனது பாராட்டுக்கள். தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது.


அதுதான் “புதுமைப்பெண் திட்டம்”. எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த “புதுமைப்பெண்” திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.


அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் கவனிப்பில், பள்ளிக்கல்வித் துறை ஒரு பொற்காலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் சொல்லலாம். பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கு இருக்கும் நவீன வசதிகளை நம்முடைய ஊரில், நம்முடைய பிள்ளைகளுக்காக அறிமுகப்படுத்தி செயல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதேபோல, நம்முடைய பள்ளி மாணவ, மாணவியர்களை வெளிநாடு சுற்றுலாவுக்கும் அதிகஅளவில் அழைத்துக்கொண்டு செல்கிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறையை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.


பள்ளிக் கல்வித் துறையை நவீனப்படுத்த பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79 ஆயிரத்து 723 ஆசிரியர்களுக்கு 'TAB' என்னும் கையடக்கக் கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதைப் பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன்.அடுத்து, தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதுக்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.


முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். இது எல்லாமே உங்களுக்காகத்தான். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழக மாணவர்கள் சவால் விடுகின்ற அளவுக்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்... படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. 'கமா' தான் தெரியவேண்டும்.


கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை “நீட்” போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். “நீட்” போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழகம்தான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.


கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும். அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம், என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459