பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபன் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை,காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, உறைக்காலணி, காலுறைகள், பேருந்துபயண அட்டை மற்றும் மிதிவண்டிபோன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும்மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்குவது அவசியமாகிறது.
குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில வசதியாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்ய நேரடி பயனாள் பரிமாற்றம் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தும் முறை அமலாகியுள்ளது.
இந்நிலையில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பானது கல்வி ஆண்டின் தொடக்க நாளான ஜூன் 6-ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்த நிகழ்வு அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுவதால் அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment