வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள் - 8 - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2024

வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள் - 8

 


 

IMG_20240515_084554

வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள் - 8

என்னையே எனக்குக் கண்டுபிடித்துத் தந்த அந்த மூவருள் ஒருவர்!

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளின் படிப்புக்குக் கொடுப்பதை விட ஒழுக்கத்திற்கு தான் அதிகம் முக்கியத்துவம் தருவது பிடிக்கும். பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நான், ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய வகுப்பில் எதிர்கொள்ளும் மாணவர்களிடம் இரண்டு உறுதிமொழி கட்டாயம் எடுத்துக்கொள்ளச் செய்வது என் வழக்கம்.

அதாவது, முதலாவது எதை முன்னிட்டும் பொய் பேச முயற்சி செய்யக் கூடாது. அடுத்ததாக, பிறர் பொருளைத் தெரியாமல் எடுத்து வைத்து மறைத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், குழந்தைகள் மிகவும் நல்லவர்கள். தவறான மனிதர்களும் மோசமான சூழலும் தாம் அவர்களை நெறிபிறழ வைக்கும். சில பொழுதுகளில் ஏற்படும் அசாதாரண சந்தர்ப்பங்கள் அவர்களது நடத்தையில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. இஃது என் அசைக்க முடியாதக் கருத்தாகும்.

இத்தகைய சூழ்நிலையில், நான் வகுப்பாசிரியராக இருக்கும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் கல்வியாண்டின் இறுதியில் பள்ளிக்கான நினைவுப்பரிசுடன் கூடிய பிரியாவிடை நிகழ்வைச் சிறப்புடன் கொண்டாட அன்றாடம் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தம் சொந்த செலவிற்கும் மற்றொரு பகுதியைத் தம் சேமிப்பிற்கும் பிறிதொன்றை மேற்குறிப்பிட்ட நிகழ்விற்கும் செலவழிப்பது குறிப்பிடத்தக்கது. குறைவான மாணவ மாணவியரே ஆனாலும், இந்த தன்னார்வ சேமிப்பில் மாணவிகள் தாம் அதிகம் பங்களித்து வந்தனர் என்று சொல்லலாம். மாணவர்கள் கடைசியில் தம் பங்கு மொத்தத்தையும் அளித்து விடுவதாகக் கூறிக்கொண்டு இதுகுறித்து எந்தவொரு கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தனர்.


இந்த இடத்தில் ஒன்றை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். இந்த நிகழ்விற்காக நான் மாணவர்களை ஒருபோதும் ஊக்கப்படுத்துவதில்லை. அதேவேளையில், பள்ளி மீதான, தமக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் மீதான நன்றியுணர்ச்சியைக் காட்டும் அவர்களது தன்னார்வ செய்கைக்கு இடையூறாக இருக்கவும் நான் விரும்புவதில்லை. எல்லா செடிகளும் பூ பூக்கட்டும் என்பது எனது கருத்து. 

இந்த வளரும் சேமிப்பில் அவ்வப்போது பணத்தைப் போட என் வசமுள்ள மைசை சாவியை வலிந்து பெற்று மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதற்குரிய பணப்பையில் இடுவதும் கையாள்வதும் முக்கியமாக ஒரு சிறுமியின் பணியாகும். அவள் வராத பட்சத்தில் அதைக் கையாள ஒரு சிறுவனும் அவனுக்குத் துணையாக ஒருவனும் என மொத்தம் மூவர் மட்டுமே அப்பணியில் ஈடுபடுவார்கள். இதுவும் மாணவர்களால் எடுக்கப்பட்ட முடிவுதான்!

கடந்த மார்ச் மாதத்தில் ஒருநாள்...

"சார்! மணி பர்சைக் காணோம்!"

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பதற்றத்துடன் எப்போதும் அதைக் கையாளும் சிறுமிதான் முதலில் ஓடிவந்து வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாகப் பற்றி வைத்தாள். வகுப்பு முழுவதும் ஐயையோ என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வாட்டத்துடன் தம் கவலையைக் கேள்வியாக்கி உட்கார்ந்திருந்தது. 

எல்லா கண்களும் என்னையே உற்றுநோக்கிக் குடைந்து கொண்டிருந்தன. எனக்கு என்ன செய்வதென்றும் சொல்வதென்றும் தெரியவில்லை. குழம்பினேன். முதல் பாடவேளை வழக்கம்போல் இனிதாகக் கழியும் என்று நினைத்து ஆசையாசையாக வந்தால் இப்படி ஆகிவிட்டதே என்கிற கவலை ரேகைகள் முகம் முழுவதும் படரத் தொடங்கிவிட்டன. 


"ஏய்! எல்லாரும் நல்லா தேடிப் பார்த்தீங்களா?..."

முடுக்கினேன் வேகமாக. 

"நல்லா பார்த்தாச்சு சார்! வேணும்னா நீங்களே பாருங்க!"

பதிலுக்கு என்னைத் தேடச் சொன்னார்கள். எரிச்சலும் விரக்தியும் மேலோங்க. 

நான் தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்து கொண்டு இண்டு இடுக்கு எங்கும் துலாவிப் பார்த்தேன். ஒன்றும் தட்டுப்படவில்லை. நான் வைத்திருக்கும் கற்பித்தல் சார்ந்த பொருள்கள் எல்லாவற்றையும் மீண்டும் வெளியில் எடுத்து வைத்து சல்லடையாய் சலித்துப் பார்த்ததில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கைக்கெட்டும் தொலைவில் தான் அந்த பணப்பை இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. அதற்கு இவ்வளவு மெடக்கெடல் தேவையில்லை. ஆனாலும் ஒரு நப்பாசை. எப்படியாவது கிடைத்துவிடாதா என்று!

வகுப்பறை ஓரத்திலிருந்த பழுதான இரும்பு அலமாரியிலிருந்து அநாதையாகக் கிடந்த காணாமல் போன பணப்பையைத் தேடிக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இதில் சம்பந்தப்படாத மாணவன் ஒருவன் துள்ளி ஓடிவந்தான். 

அது திறந்து கிடந்தது. உள்ளே எதுவுமில்லை. காலியாக என்னைப் பார்த்துக் கேலியாகப் பல்லிளித்தது கண்டு எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. முகம் பேயறைந்தாற்போல் ஆனது. துக்கம் தொண்டை அடைக்க பாவமாக எல்லோரையும் பார்த்தேன். வகுப்பே தலை கவிழ்ந்து கிடந்தது. 

 

மூன்றாம் மனிதரிடம் ஒன்றுமே தெரியாமல் நிற்கும் மாணவனைக் கண்டு கூட நான் இவ்வளவு கலவரமும் வருத்தமும் அடைந்ததில்லை. நிமிர்ந்த தலையுடன்தான் அவர்களுக்குப் பதில் கூறியுள்ளேன். அதில் எனக்கு எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இதுநாள்வரை இருந்ததில்லை. 

ஏனெனில், இந்த நொடியில் படிக்காதோர் பலர் பிற்காலத்தில் நன்கு படிக்கக்கூடியவர்களாக, மேதைகளாக, நல்ல திறமைசாலிகளாக, இளம் வியாபாரிகளாக, வளரும் அரசியல்வாதிகளாக ஒளிரும் அதிசயம் கண்கூடாக நானே பல நேரங்களில் கண்டதுண்டு. 

ஆனால்... ஆனால்... இது என்னை மிகவும் துன்பப்படுத்தி விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த நடத்தைக் கோளாறை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

ஓடும் மின்விசிறிக்குக் கீழே அமர்ந்திருக்கும் எனக்குள் வியர்த்துக் கொட்டியது. இதயத்திற்குள் துடித்தது தொலைவில் சுவரில் மாட்டியுள்ள கடிகாரத்தின் காலடி ஓசைகள்‌.

தலை சுற்றுவது போல் ஓர் உணர்வு. பேச நா எழவில்லை.

"என் வகுப்புப் பிள்ளைகளிடம் இப்படிப்பட்ட ஒழுங்கீனமா?" இதுவரை இப்படியொரு பணம் காணாமல் போகும் நிகழ்வை நான் சமீபத்தில் பல ஆண்டுகளாகவே எதிர்கொண்டது கிடையாது. பலபேர் புலம்பக் கேட்டிருக்கிறேன். வகுப்பறையில் காசு பறிகொடுத்த துயரக் கதை பலவற்றை. அது மாதிரியான சமயத்தில் நான் நெஞ்சு நிமிர்த்தி நடந்தது உண்டு. கர்வத்துடன் சொல்லவும் செய்திருக்கிறேன். 


'எம் பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்காமல் கூட இருப்பார்கள். ஆனால், ஒருபோதும் திருட்டில் மட்டும் ஈடுபடவே மாட்டார்கள்.'

அப்படித்தான் எனக்குக் கிடைத்த மாணவக் கண்மணிகள் இருந்திருக்கிறார்கள். அது நான் செய்த பெரும் புண்ணியம். 

ஒரு நரகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு இப்போது. இப்படியொரு நெருக்கடியை எதிர்கொள்ளாத எனக்கு என்ன செய்வதென்று எளிதில் புரிபடவில்லை. திக்குமுக்காடித் திணறினேன். இது எனக்காக யாரோ ஒருவர் வைத்த தேர்வு. எப்படி சார் இதில் வெற்றி பெறுகிறார் என்று கங்கணம் கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை அவர்களது முகமே எனக்குக் காட்டிக் கொடுத்தது.

"எவ்ளோ இருந்துச்சு! தெரியுமா?" 

குரல் பிசிறடித்தது. எப்போதும் உரத்த குரலில் ஊருக்கே கேட்கும் அளவிற்கு பேசும் நான் அன்று பக்கத்தில் இருக்கும் நபருக்குக் கூட கேட்காத வகையில் அவ்வளவு மெதுவாகக் கேட்டேன். புரியாமல் விழித்தனர். சைகையால் விளித்துக் கேட்டேன்.

"ஓ! அதுவா! எறநூறு இருக்கும்"

"ஒனக்குத் தெரியுமா? மொத்தம் அதுல இருந்தது, எறநூறு இல்லே. எறநூத்தி அம்பது!"

"அதுக்கு ஏன் இப்புடி காட்டுக்கத்துக் கத்துறீங்க?!"

வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்று மெல்லிய குரலில் வினவினேன். இது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. 

"சரி. என்னைப் பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல. ஆமாம்தானே?"

"ஆமாம் சார்!"

அளவோடு பதிலளித்தனர். ஆச்சரியமாக இருந்தது.

"ஆனா?..."

"திருடுறதும் பொய் சொல்றதும் உங்களுக்கு சுத்தமா பிடிக்காது!"

"இப்ப என்ன பண்ணலாம்?!"

"ஆமா...இப்ப என்ன பண்ணலாம்!?"

விழி அம்புகள் குத்தீட்டிகளாய் பாய்ந்தன. நானும் தீவிரமாக யோசித்தேன். 

"நம்மைத் தவிர வேறு யாராவது வந்து எடுத்திருக்க முடியுமா?"

அந்த குற்றவாளிக் கூண்டில் முதல் ஆளாக என்னை நானே நிறுத்தி வைத்துக் கொண்டேன். ஏனெனில், சாவி என்னிடமிருந்தது.

"அதுக்கு வாய்ப்பில்ல சார்! ஏன்னா நீங்க இந்த மூணு பேரைத் தவிர வேறு யாரு கிட்டேயும் சாவி தர மாட்டீங்க."

ஒரு மாணவி மிகச் சரியாகச் சொன்னாள். உண்மையும் அதுதான். அந்த மூவரைத் தவிர வேறு யாரிடமும் நான் உரிய சாவியை மறந்தும் தருவதில்லை. என்னே துல்லிய கணிப்பு!

"அப்ப இந்த மூவருடன் சேர்ந்து நாலாவதாக நானும் இந்த குத்தத்திற்குப் பொறுப்பேத்துக் கொள்றேன்!"

இதற்கு அனைவரின் புருவங்களும் ஒருசேர வளைந்தன. நான் அதற்காக வெட்கப்படவில்லை. என் கவனக்குறைவும் அதில் உள்ளதுதானே?

"நான் அதை எடுக்கல. அப்படியே எடுத்திருந்தேன்னா நிச்சயமா உங்ககிட்ட சொல்லியிருப்பேனா? மாட்டேனா?..."

"சொல்லி இருப்பீங்க சார்!"

"இதுல இன்னொன்னு. தப்பு செய்றதுக்கு எவ்ளோ துணிச்சல் நமக்குத் தேவைப்படுதோ அதைவிட அதிகமான தைரியம் செஞ்ச தப்பை நேர்மையா ஒத்துக்கிறதிலேயும் இருக்கு. புரிஞ்சுதா?"

"நாங்க எடுக்கல சார்!"

ஒருசேர கூவினர். நான் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தேன். இது முள்ளில் விழுந்த பட்டுச்சேலை. வேகமாக எடுக்க முடியாது. ஏதேனும் சேதாரம் விளைந்து விடும்‌. மிகவும் எச்சரிக்கையோடும் பொறுப்புணர்வோடும் தான் இதனைக் கையாள வேண்டும் என்று தீர்க்கமாக நான் எனக்குள் முடிவெடுத்துக் கொண்டேன். 


"சரி. நாளைக்குள் சொல்லிடணும். சக பிள்ளைங்க முன்னாடி சொல்ல கூச்சமா இருந்துச்சுன்னா... என்கிட்ட ஃபோன்ல பேசு! இல்லாட்டி மெசேஜ் போடு! இது நமக்குள்ளே இருக்கட்டும்!"

சரி என்பது போல் எல்லோரும் தலையசைத்தனர். அன்றைய வகுப்பு நிறைவடைந்தது. ஆனாலும், அன்று முழுவதும் இதுகுறித்து சக ஆசிரியர்களிடமும் வீட்டிற்கு வந்து மற்றவரிடமும் சொல்லி ஆறுதலோ தக்க தீர்வோ கேட்க முடியவில்லை. திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வலியில் துடித்துக் கிடந்தேன். பொழுது ஒரு பெரும் குழப்பமாக விடிந்தது. யாரும் இதுவரை என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

என்னே வியப்பு! நேற்று வந்திருந்த அனைவரும் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்திருந்தனர். அனைவருக்குள்ளும் ஒருவித சுறுசுறுப்பு. திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு. என்னால் இந்த செயலைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும், இந்த குற்றவுணர்வுடன் எல்லோரும் பிரிந்து போவதை நானும் விரும்பவில்லை. அதேநேரத்தில், படிப்பில் கெட்டிக்காரப் பிள்ளைகளாக வேறு பள்ளிக்குச் செல்வதை விட உயர்வானது ஒழுக்கத்தில் சிறந்த பிள்ளைகள் என்று பேர் எடுப்பதாகும் என்பதில் நான் உடும்புப்பிடியாக இருந்தேன். 

இன்னொன்று இந்த சிறு தவறு நாளை பெரும் தவறில் போய் முடிந்து விடக்கூடாது என்கிற கவலைதான் என்னை அரித்துத் தின்றது.

ஓர் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, இப்படியாகச் சொன்னேன். 

"யாரு என்பது எனக்குத் தேவையில்ல. அது இங்க யாருக்கும் முக்கியமுமில்ல. சரிதானே?... இதுக்கு நான் ஒரு புது வழிக் கண்டுபிடிச்சிருக்கேன்!"

உண்மையில் அந்த கணநேரத்தில் எனக்குள் உதித்த யோசனை தான் இதுவும். அனிச்சை செயலாக இந்த ஏழாம் அறிவு என்பது ஆசிரியரிடம் திடீரென தோன்றும் உதயமாக இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.

"இதுக்குப் பொறுப்பான அந்த மூணு பேரும் நான் கொடுக்கும் துண்டுச் சீட்ல மறைவா போயி நான் அதுல எழுதுனதை நல்லா படிச்சுப் பார்த்து குத்தத்தை ஒப்புக்கணும்னு நெனைக்கிறவங்க மட்டும் சரின்னு டிக் அடிக்கணும். மத்தவங்க ஒண்ணும் செய்ய வேணாம். அப்படியே திருப்பித் தந்துடலாம். அதுல நான் எழுதுனது என்னென்னா!..."

'இனி இந்த தப்பை என் வாழ்நாளில் ஒருநாளும் செய்ய மாட்டேன்!'

'எடுத்தத் தொகையைத் திருப்பித் தந்து விடுகிறேன்.'

'என் பொருட்டு நீங்கள் அதைத் தந்து விட சம்மதிக்கிறேன்.'

'இருந்த தொகை ரூ. _____ '

இதில் மூன்றாவதாக உள்ளதை நான் மனதார உதவுவதாகக் கூறியிருந்தேன். இந்த திடீர் பண நெருக்கடி கூட அவர்களைப் பொய்யுரைக்க வைத்துவிடும் என்று திடமாக நம்பினேன். நெஞ்சில் தைத்த நெருஞ்சி முள்ளோடு யாரும் இந்த வகுப்பைவிட்டுப் பிரியக்கூடாது என்பது என் எண்ணம். இந்த குற்றம் நிகழ்வதற்கான சூழலை ஏற்படுத்த நானும் ஒரு காரணமாக இருந்ததற்கு தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும் அல்லவா? பொதுவாகப் புழங்கும் இடத்தில் அந்தப் பணப்பையை வைத்தது என் தவறு. தனியாக வைத்திருக்க வேண்டும்!

வகுப்பு முழுவதையும் எல்லோரது நன்மைக்காகக் கண்களை உண்மையாகவே மூடிக்கொள்ள வேண்டிக் கொண்டேன். நானும் அந்தத் துண்டுச் சீட்டுகளை நீட்டியபடி இமைக் கதவுகளை நன்கு அடைத்துக் கொண்டு, கொஞ்சநேரம் அனைவரும் ஒருவித தியானத்தில் விழிகள்மூடிக் காத்துக் கிடந்தோம்.

என் விரலிடுக்குகளில் வழிந்த திடீர் துண்டுச் சீட்டுகள் மெதுவாக எடுக்கப்பட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் தஞ்சமடைந்ததை என்னால் உணர முடிந்தது. சம்பந்தப்பட்டவர்களின் சிறு சலசலப்பைத் தவிர வேறெந்த சத்தமும் அங்கில்லை. அப்படியொரு அமைதி. 

அனைவரையும் பழையபடி இயல்பாக இருக்கப் பணித்தேன். எல்லோர் முகத்திலும் ஒருவித புத்துணர்ச்சி மேலிட்டது. எனக்கும். ஆனாலும், துண்டுச் சீட்டில் உண்மை வெளிவந்திருக்குமா என்கிற ஐயம் என் நாடித்துடிப்பை மேலும் அதிகமாக்கியது. மொத்தமே மூன்று தான்! ஒவ்வொன்றாக ஒருவித அச்சத்துடன் இதயம் படபடக்க பிரித்துப் பார்த்தேன். எதிரே இருந்தவர்களிடமும் அதைக் காண முடிந்தது.

முதல் சீட்டில் எதுவும் எழுதப்படவில்லை. அதேபோல், இரண்டாவதிலும் எந்தவொரு குறியும் இடப்படவில்லை. மூன்றாவதும் இப்படியே இருக்குமோ என்று பயப்பட்டேன். பிரித்துப் பார்ப்பதில் அவசரம் காட்டவில்லை. எனக்கும் தோன்றவில்லை. ஒருவேளை இந்த இறுதித் தேர்வில் நான் தோற்றுவிடுவேனோ என்று நினைக்கும்போதே வியர்வை நெற்றியில் அரும்பத் தொடங்கிவிட்டது. யாரும் எதுவும் கேட்கவும் இல்லை. பேசவும் இல்லை.

நடுக்கத்துடனும் சலிப்புடனும் அதைப் பிரிக்கத் தொடங்கினேன். 

உண்மை என்னைக் கைவிடவில்லை!

முகம் பூரிப்பில் மலர்ந்தது. எம் பிள்ளைகளும் அதை அறிந்துகொண்டு விட்டிருந்தனர். ஓர் இனிய உதயத்தைக் கண்ட தாமரையாய் வகுப்பே பூத்துக் குலுங்கிக் கிடந்தது. 

"சார்!..."

வாய்விட்டுக் கத்தினர். எனக்கு அந்த ஆனந்த உற்சாகத்தில் கண்கள் பனித்ததில் ஒன்றும் தெரியவில்லை. கைக்குட்டையை எடுத்து ஒத்தித் துடைத்து கொண்டேன். என் பள்ளிப் பிள்ளைகள் என் நம்பிக்கையைப் பொய்த்துப் போகாமல் செய்ததற்காக உளமார நன்றி கூறிக் கொண்டேன்.

"சார்! அந்தத் தொகை எவ்ளோ இருந்துச்சுன்னு எழுதியிருந்துச்சு?..."

ஒரு சிறுமி மட்டும் கவலையுடன் கேட்டது எனக்கு என்னவோ போலிருந்தது. 

"அது என்னவாயிருந்தாலும்  நான் தந்துடுறேன்னுதான் வாக்குக் கொடுத்துட்டேன்ல! ஒங்க காசு எங்கேயும் போகலை. புரிஞ்சுதா?"

சொல்லச் சொல்ல முட்டை முழி உருட்டி மௌனமானாள் அவள். முகத்தில் ஒருவித திருப்தி தென்பட்டது. எனக்கும் இது மகிழ்ச்சியே. ஆனால் ஒன்று மட்டும் இப்போது நன்றாக விளங்கியது. சந்தர்ப்ப சூழ்நிலையால் தடுமாறித் தடம் மாறும் குழந்தைகளிடம் வீண் வெறுப்பையும் கொடிய குற்றவாளிகளுக்கான தண்டனையையும் முன்வைக்காமல் நிறைய அன்பையும் கொஞ்சம் அவர்கள் தம்மை உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பையும் அதற்குரிய இடத்தையும் வழங்குவது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்பதைப் புரியவைத்த அந்த மூவருள் ஒருவர் நான் மதிக்கும் மாண்புமிகு மாணவர் ஆவார். நான் என்னைத் தேடிக் கண்டடைந்து விட்டேன். நீங்கள்?

வகுப்பு தொடரும்...

மணி கணேசன் 

நன்றி : திறவுகோல் வைகாசி இதழ் 








































































No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459