தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என, நுழைவு நிலை வகுப்பில், மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
ஆனால், அந்த கட்டணத்தை அரசு எப்போதும் மொத்தமாக தருவதில்லை; படிப்படியாக வழங்கி வந்தது. அதைக்கேட்டு, தனியார் பள்ளிகளும் குரல் கொடுத்து வந்தன.
திடீர் நிபந்தனை
அரசு பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கக் கூடாது என, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 22 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, நலிந்த பிரிவு, எச்.ஐ.வி., பாதித்த குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை, துாய்மை பணியாளர் குழந்தை ஆகியோருக்கு, உரிய ஆவணங்கள், சான்றுகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர் வசிப்பிடத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் துாரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் முதலில் சேர்க்கை வழங்க வேண்டும். இந்த துாரத்துக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர அறிவுறுத்த வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் உரிய கட்டமைப்பு மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால், எப்படி சேர்க்க முடியும் என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இலவச சேர்க்கை வேண்டாம்
இதற்கிடையில், 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு நிதி வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் தலைவர் அருமைநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:
தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களிடம் இருந்து, புத்தகம், சீருடை, டைரி, ஷூ, டை போன்றவற்றுக்கும், கராத்தே, நீச்சல், சுற்றுலா, ஆண்டு விழா போன்றவற்றுக்கும் கணிசமான தொகை வசூலிக்கின்றன. இதை செலுத்தாத குழந்தைகள், பல வகைகளில் அவமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், பெரும்பாலும் தனி விதமாகவே நடத்தப்படுகின்றனர். ஏழை குழந்தைகள் அருகில் உள்ள அரசு சார்பு பள்ளிகளில் சேராமல், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து விடுகின்றனர்.
இதனால், அரசு பள்ளிகளில் சேர்க்கை படிப்படியாக குறைந்து, சில இடங்களில் பள்ளிகளை மூடும் நிலைமை உருவாகிறது. எனவே, தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் தொகையை நிறுத்தி, அதை இன்னும் கூடுதலாக அரசு பள்ளிகளை வலுப்படுத்த பயன்படுத்தலாம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment