இலவச கட்டாய கல்வி திட்டத்தில் 2 ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள கட்டண தொகையை தமிழக அரசு உடனே வழங்காவிட்டால், மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை யில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளுக்கு வழக்கமான தொடர் அங்கீகாரம்கூட இதுவரை தரப்படவில்லை.
இதுதொடர்பான கோப்புகளை அதிகாரிகள் ஆண்டுக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால், தனியார் பள்ளிநிர்வாகிகள் மிகுந்த மன உளைச் சல் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ‘‘ஏன் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை? இதற்கு ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்’’ என்று தனியார் பள்ளிகளுக்கு சேலம் மாவட்ட கல்விஅலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர் அங்கீகாரம் தராதது யார் தவறு. இயக்குநரகம் அங்கீகாரம் தருவதில் தாமதம் செய்வதால், பல பள்ளிகளின் நிர்வாகிகள், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பழைய பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கான தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இன்றி உடனேவழங்க வேண்டும்.
சம்பளம் தர இயலவில்லை: அதேபோல, இலவச கட்டாய கல்வி (ஆர்டிஇ) சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான 2 ஆண்டு கட்டண நிலுவை தொகை இன்னும் தரப்படவில்லை.
இதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம்கூட தர முடியாத நிலை உள்ளது. கல்வி கட்டண பாக்கியை உடனே தராவிட்டால், தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் அனைவரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்
. நிலுவை தொகை கிடைக்கும் வரை ஆர்டிஇ திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த மாட்டோம்.
எனவே, இதில் தமிழக அரசு உடனே தலையிட்டு, தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கிடைக்கவும், உரிய நிலுவை தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment