தமிழகத்தில் அதிகரிக்கும் கோடைவெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும்தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
இதர தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கு வாய்ப்பு குறைவு. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி,வேலூர், சேலம் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, தருமபுரி, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, மதுரை விமான நிலையம் , திருப்பத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, திருச்சி, நாமக்கல், மதுரை மாநகரம், கோவை ஆகியஇடங்களில் தலா 104 டிகிரி, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
தேவையான தண்ணீர்: தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில், ‘கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர்குடிக்க வேண்டும்.
பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜுஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக வெயில்சமயங்களில் வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது, காலணிகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
11 மணிக்குள் தடுப்பூசி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடித்துவிட வேண்டும். மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை வெயில் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க தனி படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதேபோல, கோடை காலத்தில் குளிர் பானங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் தொண்டை வலி, சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படவாய்ப்புள்ளது
. அதனால், குழந்தைகளுக்கு தொண்டை வலி, சளி பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற வேண்டும். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் வாங்கி கொடுக்க கூடாது என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment