புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேலானவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து வார்டு அளவில் எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் கணக்கெடுப்பை மே முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லூரிகளில் என்சிசி போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டும் கணக்கெடுப்பு நடத்தலாம்.
பிற மாநிலத்தவர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் யாரும் விடுபடுதல்கூடாது. அதன்படி எழுத, படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உட்பட பணிகளை மே 24-ம்தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment