உத்தரப்பிரதேச மாநிலத்தின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது கடின உழைப்பால் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்தவர், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). கொண்டாடப்பட வேண்டிய இம்மாணவியின் சாதனை அவரின் தோற்றத்தை வைத்து மழுங்கடிப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் நிகம். ஆனால், இம்மாணவிக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதைப் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
`ஓர் இளம்பெண்ணுக்கான முகமில்லை...' `மீசை வளர்ந்திருக்கிறது...' `நிகம் தனது அழகில் கவனம் செலுத்த வேண்டும்’ என மோசமான கருத்துகளைப் பதிவிடுவதோடு, அம்மாணவியின் புகைப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதேசமயம் அம்மாணவிக்கு ஆதரவாக பலர் ட்ரோல்களை கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இளம்பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டமைக்கப்பட்டுள்ள அழகின் நிர்ணயத்துக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
பருவ வயதுப் பெண்களை பாதிக்கும் `பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்த்திருக்கலாம் எனப் பலர் தெரிவித்துள்ளனர்.
முதலிடம் பிடித்தது குறித்து அம்மாணவி கூறுகையில், ``நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்தினேன்; ஆனால், முதல் இடத்தை எதிர்பார்க்கவில்லை. எனது கடின உழைப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியிருந்தார்.
தான் ஒரு இன்ஜினீயராக விரும்புவதாகவும், IIT-JEE நுழைவுத் தேர்வில் வெற்றிபெறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இம்மாணவி கல்வியின் சாதனைகளுக்காக மட்டுமன்றி, தான் எதிர்கொள்ளும் எதிர்மறை கருத்துகளைக் கடந்து செல்வதற்காகவும் பாராட்டப்படக்கூடியவர்.
இன்னும் ஒருவரின் சாதனையை மழுங்கடிக்கக்கூடிய வேலையை, சிலர் அழகையும் உருவத்தையும் வைத்து செய்கின்றனர். சாதிக்கக்கூட முகம்தான் முக்கியம் என நினைப்பவர்கள்தான் மாற வேண்டுமே தவிர, நீங்கள் அல்லர்...
அகம் பற்றித் தெரியாதவர்கள் புறம் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். உங்களது வெற்றிக்கான பாதை தொடரட்டும். வாழ்த்துகள் பிராச்சி நிகம்...
No comments:
Post a Comment