தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுமார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழ், கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், இன்று சமூக அறிவியல் பாடத் தேர்வுடன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத் தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10 முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும்.
இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment