'மத்திய அரசு நிதியுதவியை நிறுத்தியதால், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தயார்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள நிதியுதவி நிலுவையை வழங்கும்படி, மத்திய கல்வி அமைச்சருக்கும், தமிழக தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுதும் தரமான கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, மத்திய அரசு சார்பில், பி.எம்.ஸ்ரீ., என்ற பிரதம மந்திரியின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் திட்டம், 2022ல் அமலானது.
இணைந்தன
இந்த திட்டத்தில் சேர, ஒவ்வொரு மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி, மத்திய கல்வித்துறை வலியுறுத்தியது. அதனால், பெரும்பாலான மாநிலங்கள்ஒப்பந்தம் மேற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள்திட்டத்தில் இணைந்தன.
நாடு முழுதும், 14,500 அரசு பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்து, நவீன கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. அவற்றுக்கு, மத்திய அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மட்டும், அரசியல் காரணங்களால் இத்திட்டத்தில் இணையவில்லை. இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கான பள்ளிக்கல்வி நிதியுதவியை, மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது.
அதாவது, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வரவேண்டிய, 1,138 கோடி ரூபாய், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு வரவில்லை.
அதிலும், நடப்பு நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிவதால்,தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதி இனி கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், நம் நாளிதழில், கடந்த 29ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், செயலர் குமரகுருபரன், சமக்ர சிக் ஷா திட்ட மாநில இயக்குனர் ஆகியோர், மார்ச் 8ம் தேதி டில்லி சென்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, நிறுத்தப்பட்ட நிதியுதவியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணையாவிட்டால், நிதியுதவி கிடையாது என, மத்திய கல்வி அமைச்சர் உறுதியாக கூறி விட்டதாக தெரிகிறது
இதையடுத்து, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய பள்ளிக்கல்வி செயலர் சஞ்சய் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கான, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அந்த வரிசையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள, தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.
இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி செயலர் தலைமையில், மாநில அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன், பி.எம்.ஸ்ரீ., திட்டம் தொடர்பாக, மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.
விரைவாக கொடுங்க
எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியுதவிக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் சேராமல், இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த, தமிழக அரசு, தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்டதால், அந்த திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment